‘ஆல்பாஸ்’ திரை விமர்சனம்!
திருமணமான பிறகு உடன்பிறந்த சகோதரர்களே ஆளுக்கொரு திசையில் போகும் காலம் இது. ஆனால், வடசென்னையில் ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் மூவரும் அண்ணன்–தம்பிகளாக இல்லாமல், ஒரே குடும்பமாகவே வாழ்கிறார்கள். அவர்களின் மனைவிகளும் அப்படியே. பிள்ளைகளுக்கோ ஜெயப்பிரகாஷ்தான் பெரியப்பா… அவர் சொன்னால் வேதவாக்கு!
இப்படிப்பட்ட ஒற்றுமையான குடும்பத்துக்குள் ஐந்து கோடி ரூபாய் புகுந்தால் என்ன ஆகும்?
அதுதான் இயக்குநர் மைதீன் விளையாடியிருக்கும் சுவாரஸ்யமான ஆட்டம்!

அப்பகுதி எம்.எல்.ஏ சரத் லோகித்ஷவா, அரசியல் வேலைகளுக்காக பல இடங்களில் பணத்தை பதுக்கி வைக்கிறார். அப்படி ஒரு பழைய கிடங்கில் அவர் ஒளித்து வைத்திருந்த ரூ.5 கோடி, எதிர்பாராதவிதமாக மூன்று குடும்பங்களின் பிள்ளைகளின் கைகளில் சிக்குகிறது. பணத்தை வீட்டுக்குக் கொண்டு வந்ததும், ‘இது நம்ம பணம் இல்லை’ என்று ஜெயப்பிரகாஷ் உடனடியாக அலாரம் அடிக்கிறார்.
“எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துடுங்க!”
இதுவரை பெரியப்பா சொன்னால் தலையாட்டிய குடும்பம், இந்த முறை மட்டும் தலையை ஆட்ட மறுக்கிறது!
ஐந்து கோடி ரூபாய் கண் முன்னால் இருக்கும்போது, ‘நேர்மை, நியாயம்’ எல்லாம் கொஞ்சம் தூரமாகத்தான் தெரிகிறது. அந்தப் பணத்தை வைத்து என்னென்ன செய்யலாம் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமே ஆலோசனை போடுகிறது. மறுபக்கம், பணத்தை இழந்த எம்.எல்.ஏவும் சும்மா இருக்கிறாரா? பணத்தையும், அதை எடுத்தவர்களையும் கண்டுபிடிக்க தனது அரசியல் மூளையை முழுவதுமாக பயன்படுத்துகிறார்.
பணம் கையில் இருக்கிறது… ஆனால் செலவு செய்ய முடியவில்லை!
இதுதான் படத்தின் செமையான ‘ட்விஸ்ட்’.
ஒருபுறம் பணத்தை செலவு செய்யத் துடிக்கும் குடும்பம். மறுபுறம் அந்தப் பணத்தைத் தேடி அலையும் எம்.எல்.ஏ. இருவருக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு படம் ஓட்டம் பிடிக்கிறது.
முதலில் வடசென்னையின் வாழ்வியலை மிக இயல்பாக காட்டும் படம், ஐந்து கோடி ரூபாய் கதைக்குள் நுழைந்தவுடன் வேகம் பிடிக்கிறது. அந்த இடத்திலிருந்து “அடுத்து என்ன?” என்ற கேள்வியை நமக்குள் விதைத்துவிட்டு திரைக்கதை நகர்கிறது.
ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் மூவரும் நடிக்கவில்லை… வாழ்ந்திருக்கிறார்கள். வடசென்னை மக்களின் இயல்பான பேச்சு, உடல்மொழி, குடும்ப பாசம், சின்னச் சின்ன ஈகோ என எல்லாவற்றையும் மிகைப்படுத்தாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
செந்திகுமாரி, வினோதினி, மோகனா.ஆர் ஆகியோர் மனைவிகளாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள்.
இளம் ஜோடியான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் – ஜனனி இருவரின் காதல் காட்சிகள் படத்தின் விறுவிறுப்புக்கு நடுவில் ஒரு ‘கூல் டிரிங்க்’ மாதிரி. இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் கமர்ஷியல் ரசிகர்களை கவரும் ரகம்.
மூன்று குடும்பங்களின் பிள்ளைகளாக வரும் சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோர், குழந்தைகள் என்பதற்காக ஓவராக நடிக்காமல், கதைக்குத் தேவையான அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
எம்.எல்.ஏவாக வரும் சரத் லோகித்ஷவா, கவுன்சிலராக வரும் சத்யா, இன்ஸ்பெக்டராக வரும் அருவி மதன் உள்ளிட்டோர் திரையில் தோன்றும் நேரம் குறைவாக இருந்தாலும், கதையின் ஓட்டத்தில் தங்களுக்கான தடத்தை பதித்துவிடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தில்ராஜுவுக்கு ஒரு தனி பாராட்டு. வடசென்னையை ‘பில்டர்’ போட்டு அழகாக்காமல், இருப்பதை இருப்பது போல காட்டியிருக்கிறார். அந்தப் பகுதியின் தெருக்கள், வீடுகள், மனிதர்கள் என அனைத்திலும் செயற்கைத்தனம் இல்லாத இயல்பு தெரிகிறது. கிடைத்த வசதிகளுக்குள் பாடல் காட்சிகளையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக காதல் பாடல் காதில் விழுந்தவுடன் மனதில் தங்கிவிடுகிறது. பின்னணி இசை, பணத்துக்குப் பின்னால் ஓடும் திரைக்கதைக்கு தேவையான வேகத்தை சரியாகக் கொடுத்திருக்கிறது.
எஸ். பாஸ்கரின் படத்தொகுப்பு, முதல் பாதியை பரபரப்பாக நகர்த்துகிறது. ஆனால், அந்த முதல் பாதியின் வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் ‘பிரேக்’ போடுகிறது. சுவாரஸ்யம் குறையும் சில இடங்களை இன்னும் கத்தரித்திருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கும் மைதீன், அரசியல்வாதியின் கருப்புப் பணத்தையும், எளிய மக்களின் ஆசைகளையும் ஒரே கதைக்குள் வைத்து ஒரு வித்தியாசமான திரில்லரை உருவாக்கியிருக்கிறார்.
கதையின் சுவாரஸ்யமே பணம் கிடைத்ததல்ல… கிடைத்த பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாததுதான்!
ஐந்து கோடி கையில் இருக்கிறது. ஆனால் அதை வைத்து ஒரு டீ கூட குடிக்க முடியாத நிலை என்றால் எப்படி இருக்கும்? அந்தத் தவிப்பை இயக்குநர் நன்றாகவே திரைக்கதைக்குள் பயன்படுத்தியிருக்கிறார்.
அதோடு, அந்தப் பணம் மூன்று குடும்பங்களுக்குள் ஏற்படுத்தும் விரிசல், எம்.எல்.ஏ பணத்தைத் தேடும் விதம், அவர்களை கண்டுபிடிக்க அவர் கையாளும் யுக்திகள் என ஒவ்வொன்றையும் ஒன்றோடு ஒன்று இணைத்து சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்.
முக்கியமாக, பணத்தை எடுத்தவர்கள் ஏன் எளிதில் சிக்கவில்லை என்பதற்கான காரணங்களையும் லாஜிக்கோடு அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. அதனால், “அடுத்தது என்ன?” என்ற எதிர்பார்ப்பு படம் முழுவதும் தொடர்கிறது.
அதே நேரத்தில், முதல் பாதியில் இருந்த அந்த ‘ஸ்பீடு’ இரண்டாம் பாதியில் சற்றுக் குறைகிறது. கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த சில இடங்களில் இயக்குநர் கொஞ்சம் தடுமாறியிருப்பது தெரிகிறது.
ஆனாலும், பெரிய ஹீரோ, பிரமாண்ட ஆக்ஷன், தேவையில்லாத பில்டப் என எதையும் நம்பாமல், ஒரு நல்ல கதையை எடுத்துக்கொண்டு, அதற்குள் குடும்பம், பணம், அரசியல், ஆசை, உறவு என எல்லாவற்றையும் கலந்து, லாஜிக் மீறாமல் சொல்லியிருப்பதில் இயக்குநர் மைதீன் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில்…
ஐந்து கோடி பணம் கிடைத்தால் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைக்கிறீர்களா?
இந்தப் படம் சொல்வது வேறு கதை!
பணம் கைக்கு வந்த பிறகுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது!
திரில்லரும் உண்டு… குடும்பமும் உண்டு…
கொஞ்சம் கருத்தும் உண்டு!

