திரை விமர்சனம்

‘தாய்நிலம்’ திரை விமர்சனம்!

போர் என்றால் குண்டுகளும் துப்பாக்கிகளும் மட்டுமல்ல… போருக்குப் பிறகு எஞ்சியிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையும் ஒரு பெரும் போர்தான்!

2008-ல் தமிழ் ஈழத்தில் இறுதி யுத்தம் தீவிரமாக நடக்கும் காலகட்டம். மனைவியை போரில் பறிகொடுத்துவிட்டு, தனது மகள் தமிழனியை மட்டும் உயிராகப் பிடித்துக்கொண்டு வாழ்கிறார் அமர் ராமச்சந்திரன். சுற்றிலும் மரணங்கள்… எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாத சூழல். ‘அடுத்த பலி நாமாக இருக்கக்கூடாது’ என்ற பயம் ஒருபுறம். ‘நான் போய்விட்டால் என் மகள் அனாதையாகிவிடுவாளே!’ என்ற அச்சம் மறுபுறம்.

அதனால், தமிழகத்தில் இருக்கும் மனைவியின் உறவினர்களிடம் மகளை ஒப்படைத்துவிட்டு, சூழல் சீரானதும் மீண்டும் மகளை அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்.

கடல் வழியாக பல தடைகளைத் தாண்டி மகளுடன் தமிழகத்துக்கு வரும் அமர், எதிர்பார்த்தபடி உறவினர்களிடம் மகளை ஒப்படைக்க முடியாமல் போகிறார். வேறு வழியின்றி சாலையோர வாழ்க்கை. அங்கே கிடைக்கும் சில மனிதர்களின் உதவி. அந்த உதவிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குள் ஒரு நம்பிக்கையை விதைக்கின்றன.

‘என் மகளுக்கு இனி பயமில்லாத வாழ்க்கை கிடைத்துவிடும்… நல்ல எதிர்காலத்தைக் கொடுத்துவிடலாம்’ என்று நம்பத் தொடங்குகிறார்.

ஆனால்… விதி அதற்கெல்லாம் இடம் கொடுக்கிறதா?

எதற்காக அஞ்சினாரோ, அதுவே அவரது கண் முன்னால் நடக்கும்போது ஒரு தந்தையின் இதயம் எப்படி உடைகிறது என்பதைச் சொல்வதுதான் ‘தாய்நிலம்’.

இலங்கைத் தமிழர்களின் வலி, இனப்படுகொலை, அகதிகளின் துயரம் என்று பல படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால், இந்தப் படம் போரால் பெற்றோர்களை இழந்து, திசையற்றுப் போகும் குழந்தைகளின் வலியை மையமாக்கியிருக்கிறது. அதனால்தான் படம் முடிந்த பிறகும் அந்தச் சிறுமியின் முகம் மனதைவிட்டு அகல மறுக்கிறது.

போர் நடக்கும் இடத்திலிருந்து தப்பித்து வந்தாலும், அந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் போர் முடிவதில்லை. அவர்களின் எதிர்காலம் மட்டும் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே தொடர்கிறது. ஈழம் என்ற எல்லையைத் தாண்டி, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் அதன் முதல் பலி குழந்தைகள்தான் என்பதை கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்.

அமர் ராமச்சந்திரனின் நடிப்பு இந்தப் படத்தின் முக்கியமான பலம். வசனங்களை விட அவரது கண்களே அதிகம் பேசுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் பயம், இழப்பு, பதற்றம், மகள் மீதான அக்கறை என அனைத்தையும் தனது தோற்றத்திலும் பார்வையிலும் கடத்துகிறார்.

மகள் தமிழனியாக நடித்திருக்கும் நேஹா அமர், அதிக வசனங்கள் இல்லாமலேயே மனதில் நிற்கிறார். பயம் படிந்த கண்கள்… சோர்வடைந்த முகம்… எதையும் கேட்காமல் தந்தையைப் பின்தொடரும் அந்தக் குழந்தை… திரையில் பார்க்கும் போது, அது ஒரு கதாபாத்திரமாகத் தெரியவில்லை; போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் முகமாகவே தெரிகிறது.

அகதி என்ற வார்த்தைக்கு பின்னால் இருக்கும் மனிதனைப் பார்க்கும் பாலா சிங்கின் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது. அதேபோல் கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றும் மீனவர்கள், அகதி முகாமுக்கு அனுப்பாமல் மனிதநேயத்துடன் நடக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநர்கள், வெளித்தோற்றத்தில் மிரட்டலாக இருந்தாலும் உதவும் மனிதர், சட்டத்தில் வழியில்லையென்றாலும் மனம் இருந்தால் வழி உருவாக்கலாம் என்று நினைக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் என படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் மனிதநேயத்தின் வெவ்வேறு முகங்களாக இருக்கிறார்கள்.

‘அகதிகள்’ என்று அழைக்கப்பட்டாலும், அவர்கள் முதலில் மனிதர்கள் என்பதையே இந்தக் கதாபாத்திரங்கள் நினைவுபடுத்துகின்றன.

பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு அலட்டல் இல்லாமல் கதையின் வலியை கடத்துகிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் சிறுமி முகத்தில் பவுடர் போட்டுக்கொண்டு கண்ணீருடன் நடந்து செல்லும் காட்சி… படத்தின் மொத்த வலியையும் ஒரே ஷாட்டில் சுமந்து நிற்கிறது. அந்தக் காட்சி மனதைப் பிடித்து உலுக்குகிறது.

அவுசேப்பச்சனின் இசையும் காட்சிகளுடன் கைகோர்த்து பயணிக்கிறது. வசனங்களால் சொல்ல முடியாத உணர்வுகளை அளவான பின்னணி இசையின் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

டீஜோ பி.வர்க்கீஸின் படத்தொகுப்பு படத்தை மெதுவாக நகர்த்துகிறது. சில இடங்களில் அந்த மெதுவான நகர்வு சற்று பொறுமையைச் சோதித்தாலும், கதையின் வலியை ஆழமாக உணரச் செய்வதிலும், கதாபாத்திரங்களின் மனநிலையை உள்வாங்கச் செய்வதிலும் அது உதவுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் அபிலாஷ் ஜி.தேவன், ஈழப் போரின் அரசியல் பக்கங்களைப் பெரிதாகப் பேசாமல், போருக்குப் பிறகு எஞ்சும் மனிதர்களின் வலியை முன்னிறுத்தியிருக்கிறார். குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தையின் பார்வையில் கதையை அணுகியிருப்பது படத்துக்கு அழுத்தம் சேர்க்கிறது.

காட்சியமைப்பு, சில கதாபாத்திரங்களின் நடிப்பு, பின்னணி என ஒரு சில இடங்களில் குறைகள் தென்பட்டாலும், அவை படத்தின் மைய உணர்வை முற்றிலுமாக பாதிக்கவில்லை.

போர் முடிந்துவிடலாம்… ஆனால் போரில் இழந்தவர்களின் வலி அவ்வளவு சீக்கிரம் முடியாது.

அந்த வலியை ஒரு சிறுமியின் கண்களில் காட்டி, படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை அமைதியாக இருக்கவிடாமல் சிந்திக்க வைப்பதுதான் ‘தாய்நிலம்’ படத்தின் முக்கியமான வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE