சினிமா செய்திகள்

“ரஜினி சாருடன் மோதுவது பெருமையே..” : ‘டிரோன்ஸ்’ பட நிகழ்வில் சித்தி இத்னானி OPEN TALK!

GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், நகைச்சுவை எனப் பல்வேறு அம்சங்களுடன் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. படக்குழுவினர் தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

 

முதல் படமே வித்தியாசமான முயற்சி!

தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் பேசும்போது, “இது என்னுடைய முதல் திரைப்படம். இயக்குநர் ராகவ் மிர்தாத்தை நண்பர் வீட்டில் சந்தித்துப் பேசிய பத்து நிமிடங்களிலேயே இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். அவர் பல கதைகளைச் சொன்னாலும், எனக்கு நகைச்சுவைப் படம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படித்தான் ‘டிரோன்ஸ்’ உருவானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்” என்றார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற வித்தியாசமான அனுபவம்!

நடிகர் சினிமாவாலா சதீஷ் பேசும்போது, “சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். அந்த வாய்ப்பு கிடைக்காததால் தொழில்நுட்பப் பாதையில் பயணித்தேன். மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் மோர்கன், இயக்குநர் ராகவ் ஆகியோருக்கு நன்றி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைப் போலவே, வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை இந்தப் படமும் தரும். அந்தப் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை ‘டிரோன்ஸ்’ படத்திற்கும் வழங்க வேண்டும்” என்றார்.

ஆர்.ஜே. தீபக் பேசும்போது, “நடிகராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இந்தப் படத்தில் படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. சினிமாவாலா சதீஷ், டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், சித்தி இத்னானி உள்ளிட்டோருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். அக்டோபர் 16-ம் தேதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றார்.

 

பொழுதுபோக்குடன் பேசப்படும் தீவிரமான விஷயங்கள்!

நடிகை அஞ்சலி நாயர் கூறுகையில், “ஃபேண்டஸி, ஹாரர், சர்வைவல் எனப் பல அம்சங்கள் நிறைந்த படமாக ‘டிரோன்ஸ்’ உருவாகியுள்ளது. விசித்திரமான சம்பவங்களும், ரசிகர்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும். அதேநேரத்தில், நிற அரசியல், நிறவெறி, காதல் போன்ற தீவிரமான விஷயங்களையும் சுவாரஸ்யமான முறையில் இப்படம் பேசுகிறது. வழக்கமான சினிமா பாணியை உடைக்கும் புதிய முயற்சிகளுக்கு ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

“தலைவர் ரஜினி படத்துடன் வெளியாவது பெருமை!”

நடிகை சித்தி இத்னானி பேசும்போது, “ரஜினிகாந்த் சாரின் படத்துடன் எங்களுடைய சிறிய படமும் வெளியாவது பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும்போது முதலில் நினைவுக்கு வருபவர் தலைவர் ரஜினிகாந்த். அவருடைய எளிமையும் பணிவும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்திருக்கிறது. அவருடைய வெற்றியைக் கொண்டாட நாங்களும் ஆவலாக இருக்கிறோம்.

எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை நம்பி தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் பெரிய முதலீடு செய்திருக்கிறார். அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதுடன் லாபமும் சம்பாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு ஆதரவு கிடைப்பது இயல்பானது. ஆனால், புதிய கதைகளையும் சிறிய படங்களையும் உருவாக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதிலும் ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அஞ்சலி நாயருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை; இந்தப் படம் அந்த வாய்ப்பையும் கொடுத்தது. ‘டிரோன்ஸ்’ படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“ஒரே ஜானருக்குள் அடங்காத படம்!”

நடிகர் டிராவிட் செல்வம் பேசும்போது, “‘டியூட்’ படத்தை முடித்திருந்தபோது இந்தக் கதையைக் கேட்டேன். இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகச் சொன்னபோது, என்னை ஏன் அழைக்கிறீர்கள் என்று வேடிக்கையாகக் கேட்டேன். ஆனால், வழக்கமாக நான் செய்யும் கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட ஒன்றைச் செய்ய வேண்டும் என்று இயக்குநர் கூறியதால் ஒப்புக்கொண்டேன்.

‘டிரோன்ஸ்’ படத்தை ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடக்கிவிட முடியாது. ஹாரர், நகைச்சுவை, அரசியல் கருத்துகள் எனப் பல அம்சங்கள் இதில் உள்ளன. குழந்தைகளைக் கவரும் மோகினிப் பேய், மோகினிப் பாட்டி, தேவதை உள்ளிட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பட்ட கதையைத் தயாரிக்க முன்வந்த மோர்கன் சாருக்கும், இயக்குநர் ராகவுக்கும் நன்றி.

சக கலைஞர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். சினிமாவாலா சதீஷ் எனது பெயரைப் பரிந்துரைத்ததால்தான் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக நம்புகிறேன். பரிதாபங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்டோருக்கும் நன்றி. ரசிகர்களின் வாய்மொழி வரவேற்பு இந்தப் படத்தைப் பலரிடம் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு குறைகள் இருந்தால், உங்கள் வீட்டுப் பையனுக்கு அறிவுரை சொல்வதைப் போலச் சொல்லுங்கள்; அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்” என்றார்.

கனவுகளில் நிகழும் விசித்திரங்கள் நிஜமானால்?

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், தனது அடுத்த படைப்பாக ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு, சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. மர்மமும் மாயாஜாலமும் நிறைந்த புதிய உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மேட் சயின்டிஸ்ட், துப்பறிவாளர், தேவதை, சூனியக்காரி என வித்தியாசமான கதாபாத்திரங்களும், அவற்றைச் சுற்றி நிகழும் மர்மமான சம்பவங்களும் படத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஆர். கிஷோர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். GM Morgan Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.

‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE