“மறக்கமுடியாத மாமனிதர் நெப்போலியன்” : உருகிய நாசர்!
ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ள படம் ‘அமெரிக்க ஆவி’ .200-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள், 40-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடிக்க, அமெரிக்காவில் உருவான வித்தியாசமான காமெடி ஹாரர் திரைப்படமான இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் நாசர் பேசியதாவ்து:-
” நெப்போலியன் உடனான பயணம் ‘கிழக்கும் மேற்கும்’ படத்தில் தொடங்கி, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அந்தப் படத்திற்காக நாங்கள் இருவரும் ஏறத்தாழ 30 நாட்கள் ஒன்றாகவே இருந்தோம். இப்போது எப்படி இருக்கிறாரோ…! அப்போதே அப்படித்தான் இருந்தார். அப்போது அவர் வாழ்க்கையை எப்படி திட்டமிட்டாரோ… அதே போன்ற வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். இது எனக்கு மிக பெருமையாக இருக்கிறது. சில பட்டங்கள் – சில நற்பெயர்களை- சம்பாதிப்பது கடினம். கஷ்டப்பட்டு உழைத்தால் கோடீஸ்வரன் ஆகலாம். கஷ்டப்பட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகலாம். ஆனால் மனதார எப்போதும் நெப்போலியனை வாழ்த்தும் போது ‘நல்ல’ என்றொரு வார்த்தையை சேர்த்துக் கொள்வார்கள். அது எல்லோருக்கும் கிடைக்காது.
என்னுடைய மகன் விபத்தில் சிக்கிய போது எனக்கு மிகப்பெரும் ஆறுதலை சொல்லியவர் நெப்போலியன்தான். ‘நல்ல’ என்ற பெயரை.. நெப்போலியன் மட்டும் சம்பாதிக்கவில்லை. அவருடைய மனைவியும் சேர்த்து தான் சம்பாதித்திருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக என் மனமார்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு நாங்கள் யாரும் கேட்காமல் அவராக முன் வந்து ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக கொடுத்தார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் நெப்போலியன் இளமையாக தோன்றுகிறார்.
தற்போது தான் ஒரு பத்திரிக்கைக்கு கட்டுரையை எழுதி விட்டு வந்தேன். இந்தியாவில் குழந்தைகளுக்கான படம் என்பது .0 சதவீதத்தில் கூட இல்லை. நாம் குழந்தைகளுக்காக படத்தை உருவாக்கியது இல்லை. அந்த வகையில் இந்த படம் குழந்தைகளுக்கான படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவருக்கு உறுதுணையாக இருந்த நேஷ் வில் இருந்து இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார்.

