திரை விமர்சனம்

 ‘ஹபீபி’ திரை விமர்சனம்!

சினிமாவில் இதுவரை சொல்லப்படாத இஸ்லாமியர்களின் வாழ்வியலுக்கு இயக்குநர் மீரா கதிரவன் கொடுத்திருக்கும் திரைக்கதை வடிமே ‘ஹபீபி’.

கதை..

கடையநல்லூரில் நெசவு தொழிலை வாழ்வாதராமாக கொண்டு கூட்டுக்குடும்பமாக வாழும் கஸ்தூரிராஜாவின் குடும்பம், தறி தொழில் நைந்து போகும் சூழலில் வாழ்க்கையில் வறுமை வாட்டுகிறது. இதனால் அவரது தம்பி வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறார். அதனைத்தொடர்ந்து கஸ்தூரி ராஜாவின் மகனும் வெளிநாட்டுக்குச் செல்கிறார். குடும்பம் இப்போது வசதியில் செழிக்கிறது. பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு திரும்பும் கஸ்தூரிராஜாவின் மகன் ஈசா, இனி மிச்ச காலத்தை சொந்த ஊரிலேயே வாழ்ந்து கழிக்கலாம் என்று திட்டமிடும்போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால் சில சூழலால் அந்த திருமணத்தில் தடை ஏற்படுகிறது. அந்த சூழல் என்ன? க்ளைமாக்ஸ் சொல்லும் செய்தி என்ன என்பதை அறிய ஹபீபி பாருங்கள்!

கஸ்தூரிராஜா..

இஸ்லாமிய குடும்பத் தலைவனாக கஸ்தூரி ராஜா, கதாபாத்திரம் அறிந்து உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளார். திருட்டு குற்றத்திற்காக மகனுக்கு கொடுக்கப்படும் தண்டனை கண்டு கலங்கும்போதும், பிறந்து வளர்ந்து வீட்டை விற்றுவிடலாம் என்று மகன் சொன்னதை கேட்டதும் துயரத்தில் ழூழ்கும்போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈசா..

கஸ்தூரிராஜாவின் மகனாக வரும் ஈசாவுக்கு இது முதல் படம் என்றாலும் உறுத்தாத நடிப்பில் இதயம் நுழைகிறார். காதலிக்காக திருட்டு பட்டத்தை ஏற்பதும் முன்னாள் காதலியை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போதும் படம் பார்ப்பவர்களுக்கு மனதில் வலியை கடத்துகிறார்.

ஈசாவுக்கு மணமுடிக்க பார்க்கப்படும் பெண்ணின் முற்போக்கு சிந்தனையும் ”ஏன் எனக்காக பேசல?” என்று கேள்வி எழுப்பும்போதும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

மாளவிகா மனோஜ்..

ஈசாவின் காதலியாக வரும் மாளவிகா மனோஜ், அருமையான தேர்வு, அதிக உரையாடல் இல்லை. ஆனால் கண்களாலேயே பேசும் நடிப்பு ஆகச் சிறப்பு. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சி வலி மிகுந்த கவிதை.

கஸ்தூரி ராஜாவின் தம்பி மனைவியாக வரும் அனஸ்ரேயா ராஜன், “ஊரெல்லாம் கடன் கேட்ட உனக்கு.. எங்கிட்ட கேட்கனும்னு தோணல?.. இந்த நகைதான் எனக்கு சந்தோஷம் தருதுன்னு நினைச்சிட்டில்?..” என்று பேசும் இடத்தில் கண்கள் கலங்குகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள்..

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் கடையநல்லூரும் ஒரு கதாபாத்திரமாகவே கண்களிலும் மனசிலும் பதிவாகிறது. ஒரு வாழ்வியலை சொல்லும் கதைக்கு பின்னணி இசை ரொம்பவே முக்கியம் என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கிறார் சாம் சி.எஸ்

முகமது அமீன் எழுதிய கதைக்கு  ரத்தமும் சதையுமான திரைக்கதை எழுதியுள்ள இயக்குநர் மீரா கதிரவனுக்கு பாராட்டுகள்.

குடும்பத்தின் வசதிக்காக பொருள் ஈட்ட வெளிநாடு செல்லும் இஸ்லாமியர்கள் உறவுகளுடன் ஒன்றி வாழும் சந்தோஷத்தை இழக்கும் கசப்பான உண்மையை பார்வையாளர்களுக்கு மிகச்சரியாக கடத்தியிருக்கிறார். “நாலு சுவர் மட்டும் வீடில்லையே..?”என்றெழுப்பும் கேள்வியில் விதைக்கப்படும் வலியும் வேதனையும் அத்தனை உண்மை.

இப்படி படம் அலசும், பேசும் கருத்துக்களும் விவாதங்களும் ஹபீபியை தேவையான படைப்பாக காட்டினாலும்  ஆர்ட் ஃபிலிம் ஃபார்மெட்டில் நகரும் காட்சியமைப்புகள் அனைத்து தரப்பினரையும் ஈர்க்குமா என்றெழும் கேள்வி அதிருப்தியையும் விதைக்கிறது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE