இந்த நேரத்தில் இப்படியொரு படமா?.. ‘ஆட்டி’ விமர்சனம்!
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்!” என்ற பாரதியின் தீ வரிகளுக்கு தி.கிட்டு எழுதியிருக்கும் கதையே ‘ஆட்டி’.
கதை..
சமூகத்தில் மன்னிக்கமுடியாத குற்றச்செயல்களை செய்யும் ரவுடிகளுக்கு துப்பாக்கியால் தீர்ப்பெழுதும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன். இதனால் தண்ணி இல்லா காட்டுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார் இசக்கி. ஆனால் அவர் போகும் இடம் தண்ணி இல்லா காடு இல்லை. தேயிலை தோட்டங்களும் முகில் கூட்டங்களும் நிறைந்த அழகிய மலை கிராமம் அது. அந்த கிராமத்தில் குற்றங்களுக்கே இடமில்லை என்னும் நிலையில் புகார், வழக்குகளுக்கும் இடமில்லை. சுருக்கமாக சொன்னால் போலீசுக்கு வேலையே இல்லை.
இந்த நிலையில்தான் ஊருக்கு வாத்தியாராக வந்த பிரவீன் பழனிசாமி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அட போலீசுக்கு வேலை வந்திருச்சில்ல என்று நினைக்கும்போது கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் மண்டை காய்ந்து போகிறது? கொலையாளி யார்? வாத்தியார் கொல்லப்பட்டது எதற்காக என்ற கேள்விகளுக்கெல்லாம் க்ளைமாக்ஸில் கிடைக்கிறது விடை.

நடிகர்கள்..
இன்ஸ்பெக்டராக வரும் இசக்கி கார்வண்ணன் கதையின் நாயகன் என்றாலும் அடக்கி வாசித்து மற்ற கேரக்டர்களுக்கும் இடமளித்திருக்கிறார். ரவுடிகளை பொட்டு பொட்டுன்னு போட்டுத்தள்ளும் கோவக்கார இன்ஸ்பெக்டராக வந்தாலும் காக்கி சட்டைக்குரிய உடல்மொழி மிஸ்ஸிங். நடிக்கறக்கு முன்ன ஒரு பத்து கேப்டன் படம் பார்த்திருக்கலாமே சாரே…
மலை கிராமத்து குழந்தைகளுக்கு கல்வி அறிவு ஊட்டும் பெண்ணாக அபிநட்சத்திர வருகிறார். தன்னிடம் இச்சையை வெளிப்படுத்தும் வாத்தியாரின் கன்னத்தில் பளார் என்று வைத்து வசனம் பேசும் இடத்தில் மட்டும் அபிக்கு நடிக்க வாய்ப்பு. மற்ற இடங்களில் சும்மாவே வந்துபோய் சரியான கேரக்டர் இல்லையே என்று நொந்து போகிறார்.
கத்தும் காதல் சுகுமார்..
காம பித்துப் பிடித்த வாத்தியாராக பிரவீன் ஆடியன்சுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் அளவுக்கு கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்.
படிப்பென்றாலே ஓட்டமெடுக்கும் சிறுவர்கள் சிறப்பு. போலீசாக வரும் காதல் சுகுமார் காட்டு கத்து கத்தி கடுப்பேத்துகிறார். கொஞ்சம் நடிங்க பாஸ்..

தொழில்நுட்பம்..
அற்புதமான மலை கிராமத்து அழகை நேர்த்தியாக படம்பிடிக்க தவறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவம். தீசனின் பின்னணி இசை ஓகே ரகம்.
1970களின் காலக்கட்டத்த்ல் கதை நடப்பதுபோல காட்டப்படுகிறது. ஆனால் மலைவாழ் மக்களின் உடை, காவலர்களின் உடை உள்ளிட்டவை பொருத்தமற்ற உறுத்தல்.
பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் அதிரடிப் படையை கொண்டுவந்திருக்கும் நேரத்தில் ஒரு கிராமத்தில் காலங்காலமாக பெண்கள் புரட்சிப் படை இருந்தது என்ற தகவலை சொல்லும் கதைக் கரு அருமையான தேர்வு. ஆனால் அதற்கு திரைக்கதை எழுதிய ‘களவாணி’ திருமுருகன் அழுத்தம் கொடுக்க தவறியது அயற்சியை ஏற்படுத்துகிறது.
நுனுக்கம் தெரிந்தவர்களுடன் கதை விவாதம் செய்து படத்தை செதுக்கியிருந்தால் ‘ஆட்டி’ ஆக்சிறந்த படமாக வந்திருக்கும்.

