திரை விமர்சனம்

’எங்கள் தங்கம்’ திரை விமர்சனம்!

பெண்களை கதையின் நாயகிகளாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படங்கள் எப்போதும் பேசப்படுகின்றன. அந்த வரிசையில் சமந்தாவை ஆக்சன் ஹீரோயினாக வைத்து தயாரான திரைப்படம்தான் எங்கள் தங்கம். இயக்கியவர் பிவி. நந்தினி ரெட்டி.

இருபக்கமும் வயல்வெளிகள் கொண்ட ஆந்திர கிராமத்துச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து செல்கிறது. அதில் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் அவரது கணவர் திகந்தும் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். அங்கே தங்கை திருமணம். பெற்றோரிடம் காதல் பற்றிச் சொல்லி ஆசி வாங்க மனைவியை அழைத்துச் செல்கிறார் திகந்த். அந்த பெரிய குடும்பத்தில் சமையல், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் தெரியாமல் தடுமாறுகிறார் சமந்தா.

ஒரு கட்டத்தில் சமந்தாவின் முற்பகுதி வாழ்க்கை தெரியவருகிறது. இன்னொரு பக்கம் மாமனார் வீட்டு அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகள், தன்னை நேசித்த கர்ணா (குல்ஷன் தேவய்யா) தேடிவர கடைசியில் என்ன நடக்கிறது என்பதே கதை.

எதுவும் தெரியாத சாதுவாக கணவர் குடும்பத்திற்குள் ஸ்வர்ணாவாக நுழையும் பழைய ஜான்சியான சமந்தா, தோழியின் துணையுடன் சமையலில் தகிடுதத்தங்கள் செய்து சமாளிக்கிறார். யாரென காட்டிக்கொள்ளாமல், தன்னை பின்தொடர்பவர்களை பின்னியெடுப்பது ரசிக்கவைக்கிறது.

மக்களுக்காகப் போராடும் குழுவின் தலைவர் தனிப்பட்ட காதல், சூழ்ச்சி, துரோகம் போன்ற உணர்வுகளில் சிக்குபவராக காட்டுவது ஏற்புடையதாக இல்லை. குடும்பம் கொண்டாடம் எனச் செல்லும் கதையில் சமந்தா யார் என்பது தெரியும் வரை விறுவிறுப்பு குறையவில்லை.
புடவை கட்டிக்கொண்டு சண்டைக்காட்சிகளில் அதகளம் செய்வதை நாம் சினிமா என்ற கற்பனையில் ரசிக்கமுடிந்தாலும், அது எதார்த்தமாக இல்லை. இரண்டாம் பாதி கதை எதிர்பார்த்தது இதுதானே என்பதுபோல இருக்கிறது. வீட்டிற்குள் எதிரிகளை வீழ்த்த சமந்தா வகுக்கும் திட்டமும், ஆக்சன் காட்சிகளும் இழப்பை மீட்டெடுக்கின்றன.

வீட்டிற்குத் தெரியாமல் சமந்தா நடத்தும் நாடகங்கள் படத்திற்கு உயிரூட்டுகின்றன. கர்ணா கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் கொஞ்சம் உயரத்தில் வைத்து பிறகு கீழே தூக்கிப்போட்டதுபோல இருக்கிறது. தோழி கிரண்மையாக மன்ஜூஷா துடிப்பான நடிப்பில் மனம்கவர்கிறார்.
ஆக்சன் படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை வித்தியாக இருக்கிறது. ஆக்சன் இயக்குநர் மார்வெல் நட்ராஜ் சண்டைக்காட்சிகளை நம்பும்படி புதுமையாக அமைத்திருக்கிறார்.
‘எங்கள் தங்கம்’ திரைப்படம் மூலமாக ரசிகர்களை மகிழ்விக்க மறக்கவில்லை சமந்தா.

நன்றி: OH TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE