‘பியார் பிரேமா கல்யாணம்’ திரை விமர்சனம்!
காதலில் ‘நான்’ என்பதைக் கடந்து ‘நாம்’ என்று வருவது சுலபம். ஆனால் திருமணத்தில் அந்த ‘நாம்’ என்பதை யார் எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் கதை! அந்தக் கேள்வியைப் பின்னணியாகக் கொண்டு, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் காதல்-நகைச்சுவைப் படமாக வந்திருக்கிறது ‘பியார் பிரேமா கல்யாணம்’.
துபாயில் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்துவிட்டு, சொந்த ஊர் திரும்புகிறார் இளன். ‘காதலித்து, கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’ என்ற லட்சியத்துடன் களமிறங்குபவருக்கு, சமூக வலைதளங்களில் பிரபலமான ‘பர்ப்பிள் பாவி’ என்கிற சான்வி மேக்னா அறிமுகமாகிறார். அறிமுகம் காதலாகி, காதல் திருமணமாகிறது. அவ்வளவுதானா? இல்லை… திருமணத்துக்குப் பிறகுதான் படத்தின் உண்மையான ஆட்டம் ஆரம்பமாகிறது!

பொதுவாக நம் ஊர் திருமணங்களில் பெண், புகுந்த வீட்டுக்குச் சென்று குடும்பத்தைச் சமாளிப்பதுதான் வழக்கம். ‘அந்தக் காட்சியை அப்படியே ரிவர்ஸில் போட்டால்?’ என்ற ஒன்லைனைப் பிடித்துக்கொண்டு படம் பயணிக்கிறது. கணவன் வீட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும், மனைவி வேலைக்குச் செல்வதும் எனப் பாத்திரங்கள் இடம் மாறும்போது உருவாகும் கலகலப்புதான் படத்தின் முக்கிய பலம்.
முதல் பாதியில் இந்த ஐடியா நன்றாகவே ‘வொர்க் அவுட்’ ஆகியிருக்கிறது. குறிப்பாக எலனுக்கும் பவித்ராவின் குடும்பத்தினருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. மாமியாரைச் சுற்றி நடக்கும் இளனின் சேட்டைகள், மனைவியுடனான அவரது சின்னச் சின்ன மோதல்கள் என முதல் பாதி ஜாலியாக நகர்கிறது.
சான்வி மேக்னா கதாபாத்திரத்துக்குத் தேவையான துறுதுறுப்பையும் தன்னம்பிக்கையையும் அழகாகக் கொண்டுவந்திருக்கிறார். காதல், கோபம், குழப்பம் என உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் குறை வைக்கவில்லை. எலனுடனான அவரது கெமிஸ்ட்ரியும் இயல்பாக இருக்கிறது. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுதியிருந்தால், சான்வியின் நடிப்பு இன்னும் அழுத்தமாகப் பதிந்திருக்கும்.
ராதிகா சரத்குமார் இருக்கிற இடங்களில் எல்லாம் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. அவரது டைமிங் படத்துக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது. அதே நேரத்தில், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். அவர்களிடம் இருக்கும் நகைச்சுவைத் திறனில் பாதியைக் கூட படம் பயன்படுத்தாமல் கடந்து போவது, ‘அடடா… இதை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமே!’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
படத்தின் பெரிய குறை, கதை!
கரு சுவாரஸ்யமானது. ஆனால் அந்தக் கருவைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் கதை மிகவும் எளிமையானது. குறிப்பாக இரண்டாம் பாதியில் திருமண வாழ்க்கையின் மையச் சிக்கலை இன்னும் வலுவாகக் கட்டமைத்திருக்கலாம். கணவன்–மனைவி பாத்திரங்கள் தலைகீழாக மாறும்போது, குடும்பத்திலும் சமூகத்திலும் உருவாகும் அழுத்தத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தொட்டிருக்கலாம்.
அதற்காக படம் திடீரென சீரியஸ் சமூகப் படமாக மாற வேண்டிய அவசியமில்லை. சிரிப்புக்கு நடுவே ஒரு சின்ன நெருடல்… அந்த நெருடலுக்குள் ஒரு சின்ன உண்மை… இப்படி கதையை நகர்த்தியிருந்தால், படத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறுகிறது. சில காட்சிகள் கதையை நகர்த்துவதற்குப் பதிலாக நேரத்தை நகர்த்துவது போலத் தோன்றுகின்றன. பின்னர் மீண்டும் வேகம் பிடித்தாலும், ஆரம்பத்தில் கிடைத்த அதே சுவாரஸ்யத்தை முழுமையாகத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
தொழில்நுட்ப ரீதியாகப் படம் திருப்திகரமாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படத்தின் லைட்டான மனநிலைக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. பிரதீப் இ. ராகவின் படத்தொகுப்பு படத்தை இரண்டு மணி நேரத்துக்குள் சுருக்கமாக வைத்திருக்க உதவுகிறது. தயாரிப்பு வடிவமைப்பு, ஒலி–காட்சி விளைவுகள் ஆகியவையும் கவனிக்க வைக்கின்றன. ஒளிப்பதிவும் கதையின் லைட்டான டோனுக்குப் பொருத்தமாக உள்ளது.

நடிகராக இளன் நம்பிக்கை தருகிறார். ஆனால் நடிகரைத் தாண்டி இயக்குநராகவும் எழுத்தாளராகவும் அவர் இன்னும் கொஞ்சம் கடுமையாகத் தன்னையே எடிட் செய்திருக்கலாம். குறிப்பாக கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான பயணமும், மைய மோதலும் இன்னும் வலுவாக இருந்திருக்க வேண்டியவை.
மொத்தத்தில்…
‘பியார் பிரேமா காதல்’ பெரிய புதுமையான காதல் கதை அல்ல. ஆனால், பழக்கமான திருமண வாழ்க்கைக்குள் ஒரு சின்ன ‘ரிவர்ஸ் கியர்’ போட்டு, அதிலிருந்து நகைச்சுவையை உருவாக்கியிருக்கும் படம்.
முதல் பாதியில் சிரிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் தடுமாறுகிறது. சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம் என்ற குறை இருந்தாலும், சீரியஸாகப் போகாமல் லைட்டாக ரசிக்க வைக்கும் முயற்சி என்பதில் படம் வெற்றி பெறுகிறது.

