6 மணி சீக்ரெட்டில் சிரிக்க வைக்கும் ‘ராம் அன்ட் லீலா’ : திரை விமர்சனம்!
திருமண வயதைத் தாண்டியும் ‘பெண் தேடும் படலம்’ முடியாமல் தவிக்கும் ராம் (ரியோ), ஒரு கட்டத்தில் வர்டிகாவை சந்திக்கிறார். பார்த்ததும் காதல். பேசினதும் காதல். காதலித்ததும் கல்யாணக் கனவு!
ஆனால், வர்டிகாவிடம் ஒரே ஒரு கண்டிஷன்.
“மாலை 6 மணிக்கு மேல நான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன். அதனால் 6 மணிக்கு மேல என்னை சந்திக்கக் கூடாது!”
காதலின் வேகத்தில் ரியோவுக்கு அந்த 6 மணி ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ‘காதலி சொன்னா கேட்கணும்’ என்று ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், சில நாட்களிலேயே அந்த ஆறு மணி… காதலுக்கு டைம் டேபிள் போடுவதோடு நிற்காமல், ராமின் வாழ்க்கைக்கே பிரச்னையாக மாறுகிறது.
‘சின்னதம்பி’ கவுண்டமணி மாதிரி “மாலைக்கண் பிரச்சனையோ?” என்று ராமும், நாமும் யோசிக்க ஆரம்பிக்கிறோம்.
ஆனால் இயக்குநர் நம்முடைய யூகத்தை அங்கேயே தூக்கி எறிகிறார்.

வர்டிகாவுக்கு இருக்கும் பிரச்சனை என்ன? அதைத் தெரிந்த பிறகும் ராம் காதலைத் தொடர்ந்தாரா? இந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்ததா? என்பதுதான் ‘ராம் & லீலா’.
ஆறு மணி… ஆறு மணிக்குப் பிறகு?!
படத்தின் மொத்த சுவாரஸ்யத்துக்கும் அந்த ‘6 மணி’தான் முதல் விதை.
ஒரு காதலி, “இந்த நேரத்துக்கு மேல என்னை பார்க்காதே” என்று சொன்னால், காதலன் என்ன செய்வான்?
முதலில் கேட்பான்.
அடுத்து சந்தேகப்படுவான்.
அதற்கடுத்து விசாரிப்பான்.
கடைசியில்… உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டான்!
அப்படித்தான் ராமும் பயணிக்கிறார்.
இந்த எளிய சந்தேகத்தை வைத்துக்கொண்டு, இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் உருவாக்கியிருக்கும் திரைக்கதைதான் படத்தின் முக்கியமான பலம். குறிப்பாக வர்டிகாவின் பிரச்சனை என்ன என்பதைச் சுற்றி படம் கட்டமைக்கும் எதிர்பார்ப்பு, பல இடங்களில் நம்மையும் ராமுடன் சேர்ந்து துப்பறிய வைக்கிறது.
ரியோ – காதலன்… காமெடியன்… அப்பாவி!
கல்யாணத்துக்காக ஏங்கும் இளைஞன் ராம் கதாபாத்திரத்தில் ரியோ.
பெண்கள் உலகமே தெரியாத அப்பாவி. காதலிக்கத் தெரியும். ஆனால் காதலியைப் புரிந்துகொள்ளத் தெரியாது!
அதனாலேயே அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் காமெடியாக மாறுகிறது.
காதலுக்காக ஏங்குவது, எதிர்பாராத பிரச்னையில் சிக்குவது, அதிலிருந்து வெளியே வரப் போராடுவது என ரியோவின் கதாபாத்திரம் திரைக்கதையுடன் நன்றாகப் பயணிக்கிறது.
அவருடைய உடல்மொழி, வசன உச்சரிப்பு, சில்மிஷங்கள் என சில இடங்களில் சிரிப்பு நன்றாகவே வேலை செய்கிறது.
அதே நேரத்தில், சில காட்சிகளில் காமெடியை இன்னும் கொஞ்சம் அழுத்திக் காட்ட முயற்சிப்பதால் ‘ஓவர் டோஸ்’ ஆகிவிடுகிறது.
சில இடங்களில் அவரது நடிப்பு, சிவகார்த்திகேயனின் ஆரம்பகட்ட காமெடி ஹீரோ பாணியை நினைவுபடுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை.
வர்டிகா – அழகுக்கு அப்பால் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்!
அறிமுக நடிகை வர்டிகா அழகாக இருக்கிறார். அதிலும் கேமரா அவரை விரும்பியிருக்கிறது.
ஆனால், கதையில் அவருக்கான கதாபாத்திரம் கனமாக இருந்தும், அதை முழுமையாக வெளிப்படுத்தும் அளவுக்கு நடிப்புக்கான இடம் வழங்கப்படவில்லை.
பல இடங்களில் ‘நாயகி அழகாகத் தெரிய வேண்டும்’ என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கதையின் முக்கிய முடிச்சு அவரைச் சுற்றியே இருந்தாலும், அந்த முடிச்சை அவிழ்க்கும் பயணத்தில் நாயகனுக்குக் கிடைத்த அளவுக்கு நாயகிக்கு நடிப்பு வாய்ப்பு கிடைக்காதது சின்ன குறை.
துணை நடிகர்கள் – டீம் நல்லா வேலை செய்திருக்கு!
சேத்தன், மாளவிகா அவினாஷ், தாஃபியா அபு, முனீஷ்காந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தீபா வெங்கட், மாகாபா, காத்தாடி ராமமூர்த்தி என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்கள்.
நாயகனின் குடும்பத்திலும், நாயகியின் குடும்பத்திலும் நடக்கும் காட்சிகள் காமெடியாக நகர்வதற்கு இவர்களின் பங்களிப்பு முக்கியம்.
குறிப்பாக திருமணத்தைச் சுற்றிய காட்சிகளில் கூட்டமாக இருந்தாலும், யாரும் தேவையில்லாமல் ‘காமெடி பீஸ்’ ஆக மாறாமல் இருப்பது சிறப்பு.
கேமரா – வர்டிகாவை மட்டும் இல்ல… படத்தையே பளிச்சென்று காட்டியிருக்கிறது!
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன் படத்தை கலர்ஃபுல்லாகப் பதிவு செய்திருக்கிறார்.
குறிப்பாக நாயகியை அழகாகக் காட்டுவதில் கேமராவுக்கு தனி அக்கறை!
பளிச்சென்ற காட்சிகள், வண்ணமயமான பின்னணி என படம் முழுவதுமே ஒரு அழகான காட்சி அனுபவத்தைத் தருகிறது.
இசை – காதலுக்கு ரீல்ஸ் கன்டென்ட்!
அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும்பாலும் மாண்டேஜாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால், தனியாகக் கேட்கும்போதும் ரசிக்கும்படி இருக்கின்றன. குறிப்பாக இன்றைய இளைஞர்களின் ரீல்ஸ் உலகத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் பாடல்கள் அமைந்திருக்கின்றன.
பின்னணி இசையும் பாடல்களின் மெலடி தன்மையைத் தொடர்கிறது. காதல் காட்சிகளுக்கு இதமாகப் பயணிக்கிறது.
எடிட்டிங் – முதல் பாதி கொஞ்சம் ‘ஸ்லோ’… இரண்டாம் பாதி ‘கோ’!
படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி. சிவா, முதல் பாதியில் கதையைச் சற்று மெதுவாக நகர்த்துகிறார்.
ஆனால் இரண்டாம் பாதியில் வேகம் பிடிக்கும் படம், அடுத்தடுத்து வரும் நகைச்சுவைக் காட்சிகளால் கலகலப்பாகிறது.
குறிப்பாக காமெடி காட்சிகளின் டைமிங்கை சரியாகப் பிடித்திருப்பது படத்தின் வேகத்துக்கு உதவுகிறது.

கரு எங்கிருந்து வந்தது?
படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன் கண்ணனிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கத் தோன்றுகிறது.
“இந்தக் கருவை எங்கே பார்த்தீங்க பாஸ்?”
ஏனென்றால், இதே கருவை மையமாக வைத்து சில மாதங்களுக்கு முன்பே ஒரு படம் வெளியாகியிருக்கிறது.
ஆனால், கருவை எங்கிருந்து எடுத்திருந்தாலும், அதை அப்படியே தமிழில் இறக்காமல், தமிழ் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மாற்றியிருப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதுவும் கதையின் முக்கியப் பிரச்சனையை யூகிக்க முடியாத வகையில் வைத்திருப்பது சுவாரஸ்யம்.
காதல்… கல்யாணம்… காமெடி!
வர்டிகாவின் பிரச்சனை தெரிந்த பிறகு, படம் வேறு தளத்துக்குச் செல்கிறது.
‘இது தெரிந்த பிறகும் இந்தக் காதல் தொடருமா?’ என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் பயணத்தில் காதலின் இன்னொரு முகத்தை இயக்குநர் காட்டுகிறார்.
காதலர்கள் ஒன்று சேர்வதில் இருக்கும் சிக்கல், அந்தச் சிக்கலைத் தாண்டி நிற்கும் காதல், அந்தக் காதலுக்குள் இருக்கும் உணர்வு என சில இடங்களில் படம் சீரியஸாக மாறுகிறது.
ஆனால், அடுத்த நிமிடமே திருமணத்தை காமெடி கலாட்டாவாக மாற்றிவிடுகிறது.
அதுதான் படத்தின் சுவாரஸ்யம்.
‘ராம் & லீலா’ பெரிய சினிமா அனுபவத்தைத் தரும் படம் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு வித்தியாசமான பிரச்னையை மையமாக வைத்து, காதலையும் கல்யாணத்தையும் காமெடியாகக் கலந்து சொல்லியிருப்பதால், இரண்டு மணி நேரம் சிரித்து ரசிக்க வைக்கும் படமாக இருக்கிறது.
6 மணிக்கு மேல் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள ராமுடன் சேர்ந்து நாமும் காத்திருக்கிறோம்.
ரகசியம் தெரிந்ததும்… “அட, இப்படியா?” என்று ஆச்சரியப்படுகிறோம்.
கல்யாணம் முடியும்போது… “சரி, சிரிச்சுட்டு போகலாம்!” என்று திரையரங்கை விட்டு வெளியே வருகிறோம்.
ராம் & லீலா – காதலுக்கு கண்டிஷன் போட்டாலும், காமெடிக்கு கண்டிஷன் போடாத படம்!

