கலைக்குள் இருக்கும் அரசியல் எதிர்க்கும் ‘குரல்’ : ‘மீசைய முறுக்கு 2’ – திரை விமர்சனம்!
கானா பாடலுக்கு ஒரு தனி கெத்து உண்டு. அந்தக் கெத்தை உலக மேடைக்குக் கொண்டுபோக வேண்டும் என்ற கனவுடன் களம் இறங்குகிறார் ஜீவா (ஹிப் ஹாப் ஆதி). பேருந்து ஓட்டுநரான தந்தை சிவா (பாபா பாஸ்கர்) உடன் எளிய வாழ்க்கை வாழும் ஜீவாவுக்கு, இசைதான் உலகம். ஆனால் அந்த உலகத்துக்குள் நுழைவது அவ்வளவு சுலபமில்லை என்பதைப் போகப்போக உணர்கிறான்.
ஒரு கட்டத்தில், தான் சாதாரண பேருந்து ஓட்டுநர் என்று நினைத்துக் கொண்டிருந்த அப்பா சிவாவின் இன்னொரு முகம் ஜீவாவுக்குத் தெரிய வருகிறது. இளமையில் ‘டைகர் சிவா’ என்ற பெயரில் கலக்கிய கலைஞர் அவர். கல்லூரித் தோழி (ரம்யா ரங்கநாதன்) மீது காதல்… திருமணம்… அதன் பிறகு ஏற்பட்ட துயரம் என சிவாவின் வாழ்க்கைக்குள் புதைந்திருக்கும் பல பக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கின்றன.
அதோடு, ஜீவாவின் தாத்தா தாஸ் (கருணாஸ்) கானா இசைக்காகச் செய்த பங்களிப்பும் வெளிச்சத்துக்கு வருகிறது. குடும்பத்துக்காக அப்பா செய்த தியாகங்களையும், தாத்தாவின் இசைப் பயணத்தையும் புரிந்துகொள்ளும் ஜீவா, தனது கனவைவிட குடும்பத்தின் தேவையே முக்கியம் என்று நினைத்து, பல்வேறு சிறு வேலைகளைச் செய்யத் தொடங்குகிறான்.
‘சினிமா இசை உலகில் வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை’ என்ற யதார்த்தம் அவனது கனவையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போடுகிறது. ஆனால் கனவுகள் அப்படியே போய்விடுமா? ஜீவாவின் கானா கனவு உலக அரங்கைக் கண்டதா என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்தை முழுமையாகத் தன் தோளில் சுமந்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. நடிப்பு, பாடல், இசை, எழுத்து, இயக்கம் எனப் பல பொறுப்புகளை ஏற்றிருப்பவர், மூன்று தலைமுறை கதாபாத்திரங்களிலும் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். குறிப்பாக, இளமைத் துள்ளலும், முதிர்ச்சியான உணர்வுகளும் கலந்த அவரது நடிப்பு படத்துக்கு தனி அடையாளத்தைத் தருகிறது.
இன்றைய Gen Z ரசிகர்களைக் கவரும் வகையில் நகைச்சுவை, வேகமான மேக்கிங், இசை என ஒரு பக்கம் படம் நகர்கிறது. மறுபக்கம், சிவா மற்றும் தாஸ் கதாபாத்திரங்களின் வழியாகக் குடும்பப் பாசம், தியாகம், பழைய தலைமுறையின் கனவுகள் என உணர்வுப்பூர்வமான காட்சிகளையும் கலந்து கொடுத்திருக்கிறார் ஆதி.
கருணாஸ் – பாபா பாஸ்கர் கூட்டணி படத்துக்கு நல்ல கலகலப்பைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், அவர்கள் வரும் உணர்ச்சிகரமான காட்சிகள் சிரிப்பிலிருந்து சட்டென்று நெகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்கின்றன.
ஜீவாவின் நண்பராக வரும் ஹர்ஷத் கான், தன் பங்கை இயல்பாகச் செய்திருக்கிறார். யோகி பாபுவும் வழக்கமான காமெடி டிராக்காக இல்லாமல், கதையோட்டத்துக்கு உதவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நவீனமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
கெதிகா சர்மாவுக்கு இது நல்ல வாய்ப்பு. நடனத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரத்துக்குத் தேவையான அப்பாவித்தனமும் புத்துணர்ச்சியும் அவரிடம் இருக்கிறது. ஆதியுடன் அவர் இடம்பெறும் ‘ஆரா’ பாடல் திரையில் ரம்மியமான தருணம்.
மறுபக்கம், சிவாவின் வாழ்க்கையை நம்பி தன் குடும்பத்தை விட்டு வெளியேறும் நடனக் கலைஞராக வரும் ரம்யா ரங்கநாதன், குறைவான காட்சிகளிலேயே நிறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். காதலியாக மட்டுமல்லாமல், தனது துணையின் கனவுக்கு ஊக்கம் தரும் பெண்ணாகவும் அவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
சைத்ரா ஜே. ஆச்சார் முதிர்ந்த வயதுக் கதாபாத்திரத்தில் சிறிய அளவில் தோன்றினாலும், கிடைத்த இடத்தில் கவனம் ஈர்க்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஹிப் ஹாப் ஆதியின் இசை. கானா இசையை மையமாக வைத்துக் கொண்டு கதையை நகர்த்துவதால், பாடல்கள் வெறும் பாடல்களாக இல்லாமல் படத்தின் உணர்வுகளோடு பயணிக்கின்றன. துள்ளல், உற்சாகம், காதல், குடும்பப் பாசம் என ஒவ்வொரு மனநிலைக்கும் இசை துணை நிற்கிறது.
முதல் பாதியில் சின்னச் சின்ன சம்பவங்கள், நகைச்சுவை, புதிய கதாபாத்திரங்களின் அறிமுகம் என படம் கொஞ்சம் அங்கும் இங்குமாக அலைகிறது. குறிப்பாக, சினிமாவில் வெற்றி பெற்ற கதைகளை கேலி செய்வதும், அவற்றை விமர்சிப்பதும் ஒரு கட்டத்துக்கு மேல் திரும்பத் திரும்ப வருவதால் சற்று சலிப்பு ஏற்படுகிறது.
ஆனால், இடைவேளைக்குப் பிறகு படம் வேகம் பிடிக்கிறது. திருப்பங்கள், உணர்ச்சிகள், சண்டைக்காட்சிகள், தலைமுறைகளைத் தாண்டி பயணிக்கும் காதல் என இரண்டாம் பாதை சுவாரஸ்யமாக நகர்கிறது. முதல் பாதியில் விட்டுவிட்ட கவனத்தை இரண்டாம் பாதி மீண்டும் கையில் பிடித்துக்கொள்கிறது.
‘கனவு காண்பது மட்டும் போதாது… அந்தக் கனவுக்காக போராடவும் வேண்டும்’ என்ற எளிமையான செய்தியைப் படம் சொல்ல வருகிறது. அதே நேரத்தில், குடும்பத்துக்காக ஒருவர் செய்யும் தியாகங்களையும், அடுத்த தலைமுறை அதை உணர்ந்து கொள்ளும் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்கிறது.
இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். தேவையற்ற சில காட்சிகளைக் குறைத்து, திரைக்கதையை இன்னும் கச்சிதமாக்கியிருந்தால் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும். குறிப்பாக, சினிமாவைக் கேலி செய்யும் பகுதிகளைச் சுருக்கியிருக்கலாம்.
‘மீசைய முறுக்கு’ முதல் பாகத்தில், சினிமா இசையின் பிரம்மாண்ட உலகுக்குள் தனக்கென ஒரு பாதையை உருவாக்கத் துடிக்கும் சுயாதீன இசைக்கலைஞனின் கதையைச் சொல்லியிருந்தார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அந்தக் காலகட்டத்தில் யூடியூப் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்ததும், தமிழ் சுயாதீன இசை ஒரு புதிய அலை போல உருவாகிக் கொண்டிருந்ததும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது. அதோடு, ஆதி தனது வாழ்க்கைப் பயணத்தின் சில பகுதிகளைப் படத்துக்குள் கொண்டு வந்திருந்ததால், கதைக்கும் ஒரு நிஜத்தன்மை கிடைத்தது.
அதனால், ‘மீசைய முறுக்கு’ இளைஞர்களிடம் சுலபமாக ‘கனெக்ட்’ ஆனது. இப்போது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘மீசைய முறுக்கு 2’. முதல் பார்ட் அளவுக்கு இல்லை.
ஆனால் குறைகளைக் கடந்து பார்க்கும்போது, கானா இசையை மையமாக வைத்து காதல், குடும்பப் பாசம், நகைச்சுவை, சண்டை, கனவு என அனைத்தையும் கலந்து ஒரு இலகுவான குடும்பப் பொழுதுபோக்கைத் தருகிறது படம்.
கானா இசைக்கு உலக மேடை வேண்டும் என்ற கனவோடு தொடங்கும் இந்தப் பயணம், இறுதியில் குடும்பப் பாசத்தின் இசையையும் சேர்த்தே ஒலிக்கிறது!

