திரை விமர்சனம்

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ : திரைவிமர்சனம்!

பணம் இருந்தால் வாழ்க்கை ஜாலி… இல்லையென்றால் வாழ்க்கையே காலி! இப்படியொரு எண்ணத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஃபஹத் பாசில், பணக்கார வீட்டுப் பிள்ளைகளைக் கடத்தி பணம் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடுகிறார். ஆனால், விதி அவருக்கு ஒரு வித்தியாசமான ‘கஸ்டமரை’ அனுப்புகிறது. இறந்து போனது தெரியாமல், தன் பெற்றோரைத் தேடி அலையும் சிறுமி சாரா பாலேகர், ஃபஹத் பாசிலின் கண்ணுக்குத் தெரிகிறாள்.

உயிரோடு இருக்கும் குழந்தையைக் கடத்தலாம் என்று நினைத்தால், இங்கே இருப்பது ஒரு ஆன்மா!

தான் ஒரு பேய் என்பதை அறியாத சாரா, காணாமல் போன தன் பெற்றோரைத் தேடித் தருமாறு ஃபஹத் பாசிலிடம் உதவி கேட்கிறாள். ஃபஹத் பாசிலுக்கும் அவள் ஆன்மா என்பது தெரியாது. இப்படியாக, ஒருவருக்கு தெரியாத விஷயம் இன்னொருவருக்கும் தெரியாத நிலையில் தொடங்குகிறது இந்த வித்தியாசமான பயணம்.

‘இந்தப் பொண்ணு யாரு?’, ‘அவளுடைய பெற்றோர் எங்கே?’, ‘ஃபஹத் பாசிலுக்கு மட்டும் அவள் எப்படி தெரிகிறாள்?’, ‘இவளை வைத்து பணம் பறிக்க நினைத்த ஃபஹத் பாசிலின் திட்டம் என்ன ஆனது?’ என்று கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி, ஃபேண்டஸி உலகத்துக்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறது படம்.

ஃபஹத் பாசில் என்றாலே முகத்தில் ஒரு சின்ன அசைவு கூட நடிப்பாகிவிடும். இங்கும் அதே மேஜிக்! பணத்துக்காக எதையும் செய்யத் தயங்காத ஃபஹத் பாசிலாகவும், கொஞ்சம் கொஞ்சமாக திவ்யாவின் மீது பாசம் கொள்ளும் மனிதராகவும் தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்துகிறார். குறிப்பாக சாராவுடன் அவர் நடத்தும் உரையாடல்களிலும், அவள் செய்யும் சேட்டைகளைப் பார்த்து விழிக்கும் முகபாவனைகளிலும் ஃபஹத் தனி ஸ்கோர்.

சாரா பாலேகருக்கு இது நல்ல அறிமுகம். குழந்தைகளுக்கே உரிய வெள்ளந்தியான மனதை அழகாக வெளிப்படுத்துகிறார். தான் ஒரு ஆன்மா என்பதே தெரியாமல், சுற்றியிருப்பதை எல்லாம் மேஜிக் உலகமாகப் பார்த்து ரசிக்கும் காட்சிகளில் குழந்தைத்தனம் க்யூட்டாக ஒர்க் அவுட் ஆகிறது. அதிலும் ஃபஹத் – சாரா கூட்டணி படத்தின் முக்கியமான பலம்.

மகேஷ் மஞ்ச்ரேகர், செளரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு, கிருஷ்ணா, திவ்யா பிள்ளை, எஸ்.எஸ்.ஷஷாங்க் என மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். யாரும் கதையை ஓவர்டேக் செய்யாமல், திரைக்கதைக்குத் தேவையான இடத்தில் வந்து செல்கிறார்கள்.

பிராட் பிரான்சிஸின் ஒளிப்பதிவு படத்தின் ஃபேண்டஸி தன்மையை அழகாகப் பிடித்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் கிராபிக்ஸ் காட்சிகள், கதையின் ஓட்டத்தோடு இணைந்து வருவது ரசிக்க வைக்கிறது. ‘குழந்தைகள் படம்’ என்று தனியாக ஒரு பக்கம் ஓடாமல், பெரியவர்களும் ரசிக்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்பது சிறப்பு.

கால பைரவாவின் இசை படத்தின் மனநிலைக்கு ஏற்றபடி பயணிக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை, லைட்டான காட்சிகளுக்கு லைட்டாகவும், உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு அழுத்தமாகவும் துணை நிற்கிறது.

பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு, ஆன்மா–மனிதன் இருவரின் பயணத்தையும் சுவாரஸ்யமாகக் கோர்த்திருக்கிறது. குறிப்பாக முதல் பாதியில் வரும் மேஜிக், நகைச்சுவை, மர்மம் என அடுத்தடுத்து வரும் விஷயங்கள் படத்தை வேகமாக நகர்த்துகின்றன.

இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி, ‘பேய்’ என்றாலே பயமுறுத்த வேண்டும் என்ற வழக்கமான பாதையை விட்டுவிட்டு, ஒரு சிறுமியின் பார்வையில் ஃபேண்டஸியான உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குழந்தைகளைக் கவரும் அம்சங்களை வைத்துக்கொண்டே, பெரியவர்களுக்கான உணர்வுகளையும் கலந்து கொடுத்திருப்பது படத்தின் சுவாரஸ்யம்.

ஆனால்… முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் காணாமல் போய்விடுகிறது. கதையின் முக்கியமான கேள்விகளுக்கு பதில் தேடும் பயணம் நீளமாகிக்கொண்டே போக, திரைக்கதை சில இடங்களில் ‘இன்னும் எவ்வளவு தூரம்?’ என்று நம்மையே கேட்க வைக்கிறது. ஜவ்வாக இழுக்கும் சில காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைத்து சலிப்பை ஏற்படுத்துகின்றன.

அதே நேரத்தில் ஃபஹத் பாசில் – சாரா இடையிலான கெமிஸ்ட்ரி, குழந்தைத்தனமான மேஜிக் காட்சிகள், நகைச்சுவை, ‘ஸ்னூபி’ நாய்க்குட்டியின் காட்சிகள் என குடும்பமாக ரசிக்கக் கூடிய விஷயங்கள் படத்தை முழுமையாகத் துவண்டு போகாமல் காப்பாற்றுகின்றன.

மொத்தத்தில், பேயைக் காட்டி பயமுறுத்தாமல்… ஒரு பேய்க்குழந்தையை வைத்து பாசத்தைக் காட்ட முயன்றிருக்கும் இந்த ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’, முதல் பாதியில் ‘டிரபிளே இல்லை’ என்று ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் ‘டிரபிள்’ கொடுக்கிறது!

குழந்தைகளுடன் குடும்பமாகப் பார்க்கலாம்…
முதல் பாதி மாயாஜாலம்; இரண்டாம் பாதி கொஞ்சம் மந்தாஜாலம்!
ஃபஹத் – சாரா கூட்டணி படத்தின் உயிர்.
ஆவி கதைதான்… ஆனால் ஆற அமர ரசிக்க வைக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE