‘ஜாக்கி’ திரை விமர்சனம்!
ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை, புறா பந்தயத்தை மையமாக கொண்டு தமிழ் சினிமாவில் படங்கள் வெளிவந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் பிரபலமான கிடா சண்டையை கருவாக கொண்டு உருவான படமே ‘ஜாக்கி’.
கிடா சண்டையை உயிராக நேசிக்கும் நாயகன். பந்தா பகட்டுக்காக கிடா வளர்க்கும் பணக்கார வில்லன். இருவரின் கிடாக்களுக்கும் நடக்கும் சண்டையில் வாகை சூடுகிறது நாயகனின் கிடா. இது பொறுக்கமுடியாத வில்லனின் சதிக்கு நாயகனின் கிடா உயிர் ஊசலாடும் நிலை. ஒருவழியாக அந்த கிடா காப்பாற்றப்படும் நிலையில் நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான பகை முற்றுகிறது. இதற்கு முடிவை கட்ட மீண்டும் இருவரின் கிடாக்களும் களத்தில் இறங்குகிறது. வெற்றியை சுவைப்பது ஹீரோவா வில்லனா என்பதற்கு விடை தருகிறது பரபரப்பான க்ளைமாக்ஸ்.

கிடா நேயராகவும் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்திருக்கும் நாயகன் யுவன் கிருஷ்ணா நடிப்பு பயமே இல்லாமல் நடித்திருக்கிறார். கிடா மீது அவர் வைக்கும் பாசமும், களத்தில் வென்று ஜாக்கி பட்டத்தை பெறுவதற்காக துடிக்கும் துடிப்பும் என முதல் படம் என்ற சுவடே தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஹீரோ போன்ற முகவெட்டு இருந்தாலும் வில்லனாக மிரட்டுகிறார் ரிதன் கிருஷ்ணா. தோல்வியை ஜீரணிக்க முடியாமல் ஹீரோ வீட்டுக்குச் சென்று தீ வைப்பது; திறமையான கிடாவை போட்டுத்தள்ள காட்டும் சகுணித்தனம்; சிகரட்டை பற்ற வைத்தபடி செய்யும் வில்லத்தனம் என அதகளம் செய்திருக்கிறார். அவரை காட்டும்போதெல்லாம் ஆடியன்ஸ் மத்தியில் கிளம்பும் எரிச்சலே அவரது நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டு.
யுவன் கிருஷ்ணா மீது காதல் கொண்டு சுற்றும் அம்மு அபிராமிக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து கவர்கிறார். நாயகனின் சகோதரியாக வருபவர், ஊர் பெரியவராக வரும் மது சூதனன் என மற்ற கேரக்டர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர். படத்தில் நடித்திருக்கும் கிடாக்களும் அருமையான தேர்வு. படம் முடிந்த பிறகும் கிடாக்கள் நம் கண்களிலேயே நிற்கிறது.

என்.எஸ். உதயகுமாரின் டார்க் மோட் ஒளிப்பதிவு களத்திற்கு பொருத்தமாக அமைந்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசையில் இசையமைப்பாளர் சக்திபாலாஜி தன் பங்குக்கு மிரட்டியுள்ளார்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் டாக்டர் பிரகாபல். க்ளைமாக்ஸ் காட்சி கிடா சண்டை, படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு தள்ளுவதே அவரது திறமைக்கு சான்று. கிடா சண்டை பற்றிய டீட்டெயில் இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் ஆங்காங்கே ஏற்படும் தொய்வை தவிர்த்திருக்கலாம்.
‘ஜாக்கி’ பார்க்கலாம்!

