99/66 திரை விமர்சனம்!
புதுமண தம்பதியான ரச்சிதாவும் சபரியும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 66ஆம் எண் வீட்டில் வசிக்கிறார்கள். சபரிக்கு ரச்சிதா மேல் காதலெல்லாம் இல்லை. காசுக்காகவே பாச கணவன் போல நடிக்கிறார். ரச்சிதாவை போட்டுத்தள்ளினால் கோடி கணக்கில் பணம் வரும் என்பதால் அவரை கொலை செய்ய ப்ளான் செய்கிறார்.
பாவி கணவனின் மறுபக்கம் அறியாத அப்பாவி ரச்சிதாவோ சபரி மீது பாசத்தை பொழிகிறார். இன்னொரு பக்கம் 99ஆம் வீட்டில் குடியிருக்கும் ஸ்வேதாவுடன் ரச்சிதாவுக்கு நட்பு ஏற்பட்டு அடிக்கடி இருவரும் சந்தித்துப் பேசுகிறார்கள். ஒருநாள் ஸ்வேதாவை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவரை காப்பாற்றும்படியும் வீட்டிலிருந்து அலறியடித்து ஓடி வருகிறார் ரச்சிதா. குடியிருப்புவாசிகள் கூடிவிடுகிறார்கள். அவர்களிடம் நடந்ததை சொல்லும் ரச்சிதாவிடம், 99ஆம் வீட்டில் யாருமே குடியிருக்கவில்லை குடியிருப்புவாசிகள் சொல்ல காத்திருக்கிறது அதிர்ச்சி!

அப்படியென்றால் ஸ்வேதா யார்? கணவனிடமிருந்து ரச்சிதா தப்பித்தாரா? என்பதுதான் 99/66 படத்தின் கதை.
வசீகரிக்கும் அழகில் வழக்கம்போல் ஈர்க்கிறார் ரச்சிதா. ஆரம்பத்தில் அப்பாவி மனைவியாக வருபவர், உடம்பில் ஆவி புகுந்தபிறகு தப்பானவர்களை தூக்கிப்போட்டு பந்தாடும்போது காட்டும் ஆவேசம் அட்டகாசம்.
இன்னொரு நாயகியாக வரும் ஸ்வேதாவுக்கு பெரும்பாலும் ஒரு படகு மேலேயே நிற்கும் வேலை. ரச்சிதாவின் கணவராக வரும் சபரி, ரச்சிதாவின் தம்பிபோல் இருப்பதால் பொருத்தம் இடிக்கிறது. நடிப்பிலும் தேவைப்படுகிறது முதிர்ச்சி. நல்லவனாக நடித்து மனைவியை ஏமாற்றும் இன்னொரு வில்லன் ரோகிந்துக்கும் பெரிய வேலை இல்லை.
காமெடி என்ற பெயரில் சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி அடிக்கும் லூட்டிகள் தெண்ட சம்பளம்!
அடுக்குமாடி குடியிருப்பின் சங்க தலைவராக வரும் எம்.எஸ்.மூர்த்தியே படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர். பல காட்சிகளில் கண் சிமிட்டாமல் முறைத்துக்கொண்டே இருக்கும்போது கொஞ்சம் நடிங்க பாஸ் என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆனால் பேய் படம் என்றாலும் எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்ட வேண்டும் என்ற ஒரு செய்தியை மனம் நெகிழும் அளவிற்கு திரைக்கதையில் சொல்லியிருப்பதை பாராட்டலாம். அதற்காகவாது 99/66 படத்தை பார்க்கலாம்!

