சட்டத்தின் ஓட்டை வழியே தப்பிக்க நினைக்கும் காமப்பிசாசுகளை.. ‘நிழல்’ விமர்சனம்!
தப்பு மேல் தப்பு செய்தாலும் பணத்தை வைத்து சட்டத்தின் ஓட்டை வழியே தப்பித்துவிடலாம் என்று நினைக்கும் காமப்பிசாசுகளை தன் பாணியில் ஆபரேஷன் செய்யும் ஒரு பெண் மருத்துவரின் கதை.
‘பிக் பாஸ்’ புகழ் ஜனனி ஒரு டாக்டர். ஆனந்தமும் அன்பும் சூழ்ந்த குடும்பத்தை சேர்ந்த ஜனனி, பூப்போன்ற குணத்துக்கு சொந்தக்காரி. இப்படி உள்ளவரை புயலாக மாற்றுகிறது ஒரு சூழல். அதாவது அவர் பணியாற்றும் மருத்துவமனையின் உரிமையாளரின் மகன் மற்றும் அவனது இரு நண்பர்களை பத்ரகாளியாக மாறி பதம் பார்க்கிறார். ஜனனி அடிக்கிற அடியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார்கள்.
கொலைவெறியோடு தாக்கப்பட்ட காம பிசாசின் தாய், தனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்பது புரியாமல் காவல்துறை அதிகாரி உதவியை நாடுகிறார். ஜனனியை அவர்கள் கண்டுபிடித்தார்களா? ஜனனி ஏன் அந்த இளைஞர்களை தாக்கினார் என்பதை சொல்கிறது மீதி கதை.

அழகு ஜனனி ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம். சும்மா சொல்லக்கூடாது பெண்புலியாய் மாறி ஆடும் ருத்ரதாண்டவம் அட்டகாசம். சைலண்ட் மோடில் ஒரு கேரக்டர்; வைலண்ட் மோடில் இன்னொரு கேரக்டர் என ஜனனிக்கு இதில் டபுள் ஜாக்பாட். யெஸ்.. முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
காமக்கொடூரனாக வரும் விஜய் ஹரியும் அவரது இரண்டு நண்பர்களை பார்த்தாலே எரிச்சல் வரும் அளவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கச்சிதம் காட்டி இருக்கிறார்கள்.
ஜனனியின் காதலனாக விஷாகன், வக்கீலாக வரும் அபிஷேக், கவுசிக், தந்தை கேரக்டரில் ரமேஷ் கண்ணா என படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள்.
மோகன் குமாரின் ஒளிப்பதிவும் அபுபக்கரின் பின்னணி இசையும் ஓகே ரகம்.
பணம், அதிகார பலத்தின் உதவியுடன் குற்றங்களை செய்யும் மனித மிருகங்களுக்கு தக்க பாடம் புகட்டும் ஒரு கதை. அதை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஏ.கே.குமார். ஆனால் சீரியல் டைப் திரைக்கதையால் படத்தின் வேகமும் அழுத்தமும் குறைந்து இடைவேளைக்கு பிறகு அலுப்பை ஏற்படுத்துகிறது.
குறைகளை தவிர்த்திருந்தால் நிஜ வெற்றியை ருசித்திருக்கும் இந்த ‘நிழல்’!

