‘போலீஸ் ஃபேமிலி’ திரை விமர்சனம்!
மதுரையில் உள்ள ஒரு காவல் நிலையம். குற்றச்செயல் ஒன்றில் சிக்கும் இளைஞன் ஒருவன் போலீஸ் அடித்த அடியில் உயிரையே விடுகிறான். பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால் அந்த இளைஞனின் உடலை காவல் நிலையத்திலிருந்து எடுத்துச்சென்று ஒரு இடத்தில் வீசும் காவல்துறை, இளைஞன் கொலைசெய்யப்பட்டது போல வழக்கை ஜோடிக்கிறது. இறந்துபோன அந்த இளைஞர் முன்னாள் தாதாவான சரவணனின் (சித்தப்பு) மகன்.
மகனின் உடலை கண்டு கதறும் சரவணனுக்கு அது லாக்கப் டெத் என்று தெரியவர, அதற்கு காரணமான போலீஸ்காரர்களை காவு வாங்க துடிக்கிறார். இன்னொரு பக்கம் சரவணனின் மகன் கொலையானதன் உண்மை பின்னணியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறது காவல் துறை. நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

சரவணன், காதல் சுகுமார் உள்ளிட்ட சில முகங்கள் தவிர மற்றவர்கள் புதியவர்கள். குறிப்பாக கிட்டத்தட்ட கதையின் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜா மலைசாமி படத்தின் தயாரிப்பாளரும். புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நடித்து பாஸ் மார்க் வாங்குகிறார். உள்ளுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை கண்ணுக்குள் நிறுத்தி வெளிப்படுத்தி பாராட்ட வைக்கிறார்.
மகன் மீதான பாசம், அவனை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கும் ஆவேசம் என வழக்கம்போலவே மிரட்டி இருக்கும் சித்தப்பு சரவணனுக்கு வாழ்த்துகள்!
ஆரம்பத்தில் சாதாரண கேரக்டர்போல வந்துபோகும் காதல் சுகுமாரின் கேரக்டர் ஒரு கட்டத்தில் படத்தின் திருப்பு முனைக்கு கீ கொடுக்கும் வேலையை செய்வது சிறப்பு. கதாநாயகியாக நிஷா தூபே நடித்திருக்கிறார். ஆளும் சுமார் நடிப்பும் சுமார்.

சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த காசுக்கு குறைவைக்காமல் நடித்துள்ளனர்.
ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவும் ஜெயா கே.தாஸின் இசையும் பட்ஜெட்டை உணர்ந்து வேலை செய்திருக்கிறது. கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாலு எம். திரைக்கதையில் சஸ்பென்ஸ், விறுப்பை மெயிண்டெயின் செய்திருந்தாலும் கதையோட்டத்தில் ஆங்காங்கே இருக்கும் தொய்வுகளை தூக்கி நிறுத்த மறந்தது படத்தின் பலவீனத்திற்கு விதை போட்டுவிட்டது.
‘போலீஸ் ஃபேமிலி’ ஃபுல் ஃபீல் மிஸ்ஸிங்!

