‘எக்ஸாம்’ இணைய தொடர் விமர்சனம்!
அரசு போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை, இருட்டுப் பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு துணிச்சல் முயற்சியாக வெளியாகியுள்ள இணைய தொடரே ‘எக்ஸாம்’.
கதை..
டிஎஸ்பியான அதிதி பாலன் பணி மாற்றலாகி ஒரு ஊருக்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார். இருள் சூழ்ந்த அந்த மலை சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது காரை ஓட்டிக்கொண்டிருக்கும் அதிதியின் முதுகில் துப்பாக்கி வைக்கப்படுகிறது. “இளையராஜா பாட்ட கேட்டுட்டே போலாமா?” என்றவாறு மிரட்டல் அறிமுகம் தருகிறார் துஷாரா விஜயன்.

கட் பண்ணா… அதிதி ஒரு அறையில் அடைத்து வைக்கப்படுகிறார். அடுத்து.. அதிதி இடத்தில் ஆள் மாறாட்டம் செய்து டிஎஸ்பியாக மாறி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் துஷாரா. அதெப்படி சாத்தியம்? என்ற கேள்விகளை தவிர்க்க, லாஜிக்குடன் சீன் எழுதியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். துஷாரா விஜயனின் ஆள் மாறாட்டத்திற்கு காரணம், போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளுக்கான பின்னணி என்ன என்று கண்டுபிடிப்பதற்காகவே.
அந்தப் பின்னணியை துஷாரா கண்டுபிடித்தாரா இல்லையா? அந்தப்பின்னணியில் உள்ள மர்ம மனிதர் யார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது அடுத்தடுத்தக் காட்சிகள்.
ரத்த கவுச்சி, இரட்டை அர்த்த வசனம், கவர்ச்சி திணிப்பு என்று அரங்கேறும் இணைய தொடர்களுக்கு மத்தியில் மாறுபட்ட வழியில் பயணித்திருக்கும் இந்த ’எக்ஸாமை ’ திறம்பட எழுதியிருப்பதற்காகவே இயக்குநர் சற்குணத்தை பாராட்டலாம்.
போலி டிஎஸ்பி கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் செம பொருத்தம். இவரது கோபத்தின் பின்னணியில் இருக்கும் நியாயத்தை விவரிக்கும் காட்சிகள் கண்ணீர் கதை. ஆக்ஷன், அதிரடி, ஆத்திரம் என துஷாரா நடிப்பில் தூள் பண்ணியிருக்கிறார்.
ஒரிஜினல் டிஎஸ்பியாக வரும் அதிதி பாலன் ஆரம்பத்தில் சோபிக்கவில்லை என்றாலும் க்ளைமாக்ஸ் நெருங்கிய நேரத்தில் அதிதியிடம் தென்படுகிறது அதிரடி நடிப்பு.

நேர்மையும் இரக்கமும் கொண்ட போலீஸ் அதிகாரியாக அப்பாஸ், இலவச பயிற்சி செண்டர் நடத்துபவர், சப் இன்ஸ்பெக்டர் செழியன் வேடத்தில் நடித்திருக்கும் துரை சுதாகர் உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, சண்டை பயிற்சி உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.
போட்டித் தேர்வு மோசடிகளை தோலூரித்து காட்டியிருந்தாலும் வருங்காலத்தில் மாணவர்கள் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு எவ்வித வழிமுறைகளையும் சொல்லாதது ஏமாற்றம். ஆரம்பத்திலிருந்து விறுவிறுப்பாக செல்லும் கதை ஒருக்கட்டத்தில் ஒரே இடத்தில் சுற்றுவது அலுப்பை தருகிறது.
சிறுசிறு குறைகளை கவனித்திருந்தால் ‘எக்ஸாம்’ நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கும்.

