‘பாலன்’ திரை விமர்சனம்!
வாழ்வின் சுழலில் சிக்கித்தவித்து தடுமாறும் வஞ்சிக்கப்பட்ட ஒரு தாயும், சிறுவனும் தப்பிப் பிழைக்க ஊர் ஊராகச் செல்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் பெயர்களை மாற்றுகிறார்கள். அதேபோல வேலையும் மாறுகிறது. சிலர் அடையாளம் காண்கிறார்கள். அவர்களிடம் பொய் சொல்லி தப்பிக்கிறார்கள்.
மலைகிராமங்கள்
கேரளத்தின் அழகிய மலைகிராமங்களின் நிலப்பரப்புகளில் கதை நிகழ்கிறது. ஒரு கட்டத்தில் அம்மாவும் மகனும் ஒரு காட்டுப் பங்களாவில் தனிமையில் வசிக்கும் பாட்டிக்கு உதவியாக வருகிறார்கள்.
அங்கே நடக்கும் விபரீதங்களில் தாயும் மகனும் பிரிகிறார்கள். இருவரையும் காலம் மாற்றிப் போடுகிறது. தன் உயிருக்குயிரான தாயைத் தேடி அலையும் சிறுவனின் கதையே சிதம்பரம் இயக்கியுள்ள ‘பாலன்: தி பாய்’ படத்தின் கதை.

சர்வைவர் திரில்லர் படமாகத் தோன்றினாலும் ஆழமான தாய்ப் பாசத்தை உணர்த்தும் உளவியல் கதையாக உருவாகியிருக்கிறது. தொலைவில் மலைகள், வானுயர் மரங்களின் இடையில் செல்லும் சாலையில் அந்த தாயும் சிறுவனும் நடந்து செல்லும் காட்சிகள் கவிதை.
அம்மா சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் சிறுவன் ஆதிசேஷனின் நடிப்பும், தன்னை பாவமாக வைத்திருக்கும் முகபாவங்களும் அற்புதம். தன்னை யார் என அடையாளம் காட்டிக்கொள்ளாமல் மௌனமாக சிறுவன் காட்டும் நடிப்பு அடடா… வளர்ந்த சிறுவனாக அதே முகச்சாடையுடன் ஜினான். நல்ல தேர்வு.
எத்தனை சிரமங்கள்தான் இவர் படுவார், எவ்வளவு தூரம்தான் ஓடுவார் என்று கேட்கும் அளவுக்கு அம்மா கதாபாத்திரம். தொடரும் மனப்போராட்டத்தை உள்வாங்கி நடிப்பில் அசத்துகிறார் நடிகை பர்சனா பலதிங்கல்.
திருடனாக வரும் டோவினோ தாமஸ், திரைக்கதையில் ஒரு திருப்பத்தைத் தருகிறார். ஒரு கதையை திரையில் நேர்மையாகச் சொல்வதில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் மலையாள இயக்குநர்கள். அப்படித்தான் இந்தப் படமும் முதல் பாதியில் பொறுமையாக தொடங்குகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் சினிமாத்தனம் எட்டிப்பார்க்கிறது. அதுவே படத்தின் திரை அனுபவத்தைக் கெடுக்கிறது.
காவல்துறையா அதிகாரி பவித்ரனாக நடித்துள்ள ஜீன் பால் லால், பார்வையில் பழிவாங்கும் உணர்ச்சிகளை வைத்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தின் போக்கில் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், இந்தப் படத்தின் கதையை காட்சிகளால் மிக நேர்த்தியாக நகர்த்தியுள்ளார். கேரளத்தின் பசுமையான மனசுக்கு இதம் தரும் லேண்ட்ஸ்கேப், பல கதாபாத்திர உணர்வுகளை நமக்குத் தருகின்றன. த்ரில்லர் படங்களில் இசையும் நடிக்கும். அதில் குறைவைக்கவில்லை.
புதிய பரிமாணம்
எளிய கதைக்குள் நாம் அறியாத பல மர்மங்களையும் திருப்பங்ளையும் வைத்திருக்கிறார் கதாசிரியர் ஜித்து மாதவன். ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சிதம்பரம், இந்த ‘பாலன்: தி பாய்’ படத்தில் தாய்ப் பாசத்தின் புதிய பரிமாணத்தை தந்திருக்கிறார்.
நன்றி: OH TAMIL

