மாஸுக்கு நடுவே மனசையும் காட்டும் ரவிதேஜா : ‘இருமுடி கட்டு’ திரைவிமர்சனம்!
‘மாஸ் மகாராஜா’வின் மாஸ் முகமூடியைக் கழற்றிவிட்டு, ‘அப்பா’ முகத்தைக் காட்டியிருக்கிறார் ரவி தேஜா!
ரவி தேஜா என்றாலே அதிரடி, பஞ்ச் வசனம், பறக்கும் ஆக்ஷன் என ஒரு ‘மாஸ்’ பிம்பம் நம் கண்முன்னே வந்து நிற்கும். ஆனால், அந்த மாஸ் முகத்துக்குப் பின்னால் ஒரு நல்ல நடிகர் இருக்கிறார் என்பதை அழுத்தமாகச் சொல்ல வந்திருக்கிறது ‘இருமுடி’. சிவா நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தில், பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

கதை என்ன?
ஆத்தூரில் வாழைத் தோட்டத்தை நிர்வகித்து வரும் ஐயப்ப பக்தர் திரிநாத் (ரவி தேஜா). உலகமே ஒருபுறம் இருந்தாலும், அவரது உலகம் முழுவதும் மகள் மனெம்மா (பேபி நக்ஷத்ரா)தான்.
அப்பாவிடம் எதையும் மறைக்காமல் சொல்லிவிடும் மகளால், சில நேரங்களில் ஊர்க்காரர்களுடன் உரச வேண்டிய சூழல் வருகிறது ரவி தேஜாவுக்கு . உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்காக பேபி நக்ஷத்ராவும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சில சிறுமிகளும் பக்கத்து கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்கே எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்க… அதன்பிறகு ஒரு தந்தையாகத் ர்விதேஜா எடுக்கும் முடிவுதான் கதையின் மையம்.
சினிமாவில் அப்பா – மகள் பாசத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் கொஞ்சம் ‘பாசப் பழக்கம்’ வந்துவிட்டது. ஆனால், ‘இருமுடி’ அந்த உறவை அலட்டலில்லாமல், அழுத்தமாகச் சொல்கிறது.
ரவி தேஜா – பேபி நக்ஷத்ரா இருவருக்குமான காட்சிகள் படத்தின் உயிர்நாடி. இருவரும் பேசும் காட்சிகள் மட்டுமல்ல… இருவரும் ஒன்றாக இருக்கும் அந்தச் சிறிய தருணங்கள்கூட மனதைத் தொடுகின்றன. குறிப்பாக, மகளின் உலகத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு தந்தையாக ரவி தேஜா காட்டும் உணர்வுகள், அவரது வழக்கமான ‘மாஸ்’ நடிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
‘ரவி தேஜா நடிக்கிறார்’ என்ற எண்ணமே வராமல், ‘திரிநாத்தாக வாழ்கிறார்’ என்ற உணர்வு வருவதுதான் அவரது வெற்றி! சமீபகாலத்தில் ரவி தேஜாவிடம் நாம் தவறவிட்டிருந்த அந்த நடிகரை இந்தப் படம் மீண்டும் நமக்குக் காட்டுகிறது.
கலகலப்பான குட்டி நட்சத்திரம்!
பேபி நக்ஷத்ரா… இந்தப் படத்தின் இன்னொரு பெரிய பலம். காட்சிக்கு காட்சி இயல்பாக நடித்து, திரையில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். அவரது குறும்பும், அப்பாவுடனான பாசமும், இயல்பான நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கின்றன. பிரியா பவானி சங்கர், சாய் குமார், ரமேஷ் இந்திரா உள்ளிட்டவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
‘தேவையில்லாத மசாலா’ இல்லை!
இன்றைய பல படங்களில் கதையைவிட ‘கமர்ஷியல் எலிமென்ட்ஸ்’தான் கதாநாயகனாகிவிடுகின்றன. ஹீரோ அறிமுகம், தேவையில்லாத பாடல், திடீர் காமெடி, கதைக்கு சம்பந்தமே இல்லாத ஆக்ஷன் என படம் எங்கெங்கோ சுற்றிவிட்டு மீண்டும் கதைக்குத் திரும்பும்.
‘இருமுடி’ அந்தப் பாதையில் செல்லவில்லை.
கதைக்குத் தேவையில்லாத விஷயங்களைத் திணிக்காமல், கதையை நேராகப் பிடித்துக்கொண்டு பயணிக்கிறது. பெரும்பாலான காட்சிகள் கதைக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பதால், ‘இந்தக் காட்சி எதற்காக?’ என்ற கேள்வி பெரிதாக எழுவதில்லை.
இந்த நேர்மையான கதை சொல்லல் முறைக்காக இயக்குநர் சிவா நிர்வாணாவுக்கு ஒரு பெரிய பாராட்டு.
ஆனால்… கதை புதுசா?
இங்கேதான் படம் கொஞ்சம் தடுமாறுகிறது.
குற்றப் பின்னணியும், கதையில் வரும் முக்கியமான திருப்பங்களும் முற்றிலும் புதிதாகத் தெரியவில்லை. இதுபோன்ற கதைக்களங்களை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதனால், கதையின் சில பகுதிகளை முன்கூட்டியே யூகித்துவிட முடிகிறது.
படத்தின் ஆரம்பப் பகுதியில் வேகம் சற்று குறைவு. அதோடு சில இடங்களில் உதட்டசைவும் வசனமும் சரியாகப் பொருந்தாதது கவனத்தை ஈர்க்கிறது. இரண்டாம் பாதியிலும் சில இடங்களில் திரைக்கதை சற்று தள்ளாடுகிறது.
ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, கதையைச் சொல்லும் விதம் நம்மைத் தொடர்ந்து படத்துடன் பயணிக்க வைக்கிறது.
இசையும் காட்சிகளும்!
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. பக்தி, கிராமிய வாழ்க்கை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இசை வண்ணம் கொடுத்திருக்கிறார்.
விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு பலம். சிலேரு பகுதியின் இயற்கை அழகை திரையில் ரசிக்கும்படி பதிவு செய்திருக்கிறார். கிராமத்தின் மண் வாசனையும், கதையின் உணர்வுகளும் காட்சிகளுக்குள் நன்றாகக் கலந்திருக்கின்றன.
படத்தொகுப்பும் பெரிதாகக் குறை சொல்ல முடியாத அளவுக்கு திருப்திகரமாக இருக்கிறது. தயாரிப்புத் தரமும் காட்சிகளுக்கு கைகொடுக்கிறது.
‘ரங்கஸ்தலம்’, ‘நா பேரு சிவா’ போன்ற படங்களின் தாக்கம் சிவா நிர்வாணாவின் கதை சொல்லும் முறையில் ஆங்காங்கே தெரிந்தாலும், அதைக் குறையாகச் சொல்லத் தேவையில்லை. ஏற்கெனவே பார்த்த நல்ல விஷயங்களிலிருந்து உத்வேகம் பெற்று, அதைத் தனது கதைக்குள் பொருத்தமாகக் கொண்டுவருவதில்தான் ஒரு இயக்குநரின் திறமை இருக்கிறது.
அந்த வகையில், ‘இருமுடி’ தேவையற்ற ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து, கதையையும் கதாபாத்திரங்களையும் நம்பி பயணிக்கும் படம்.
ரவி தேஜாவின் நடிப்பும், அப்பா–மகள் பாசமும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. கதை புதிதாக இல்லாவிட்டாலும், அதைச் சொல்லியிருக்கும் நேர்மை மனதை வெல்கிறது.
மாஸ் மகாராஜாவின் மாஸ் குறைந்து போகவில்லை… இந்த முறை அந்த மாஸுக்கு நடுவே மனசையும் காட்டியிருக்கிறார்!

