எளிய இழைகளில் ஒரு கலகலப்பான காதல் தோரணம் : ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ விமர்சனம்!
பெரிய விஷயங்கள் பலவும் எளிமையானவையே. ஆனால், அந்த எளிமையின் அழகை உணர்வதுதான் சிரமம். அப்படிப்பட்ட சின்னச் சின்ன தருணங்களையும், மனிதர்களின் இயல்பான உணர்வுகளையும் ஒன்றாகப் பின்னி, நகைச்சுவை முலாம் பூசி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிரீஷ் ஏ.டி. ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’!
புதிய வீட்டுக்குக் குடிபெயரும் ஆஷ்லி (மமிதா பைஜு), எதிர்வீட்டு ஜஸ்டின் (நிவின் பாலி) மீது காதல் கொள்கிறார். பத்து வயது வித்தியாசம், கண்டிப்பான பெற்றோர், படிப்பு என காதலுக்கு ஏகப்பட்ட தடைகள். இந்தத் தடைகளைத் தாண்டி காதல் கரை சேர்ந்ததா என்பதுதான் கதை.
ஆனால், படம் காதலை மட்டும் சுற்றிச் சுழலவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குள்ளும் இருக்கும் சின்னச் சின்ன ஆசைகள், பயங்கள், ஈகோக்கள், மனத்தடைகள் என வாழ்க்கையின் பல பக்கங்களையும் நகைச்சுவையோடு தொட்டுச் செல்கிறது.
நிவின் பாலியின் இயல்பான நடிப்பில் ஜஸ்டின் மனதில் நிற்கிறார். வாழ்க்கையின் வலிகளை கடந்துவந்த முதிர்ச்சியான மனிதராக, ஆஷ்லியின் துடுக்குத்தனத்துக்கு நேர்த்தியான எதிர் எடையாக இருக்கிறார். மமிதா பைஜுவோ, ‘சின்னப் பெண் காதல்’ என்ற ஒரே கோணத்துக்குள் சிக்காமல், ஆஷ்லிக்கு தனி குணத்தையும் உயிரோட்டத்தையும் கொடுத்திருக்கிறார்.
இருவரின் காதலும் ஆர்ப்பாட்டமில்லாமல், மெதுவாக மலரும் பூவைப் போல இயல்பாக வளர்கிறது. அதனால்தான் அந்தக் காதல் காட்சிகள் நம்மை நெருடாமல், நம்மைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.
படத்தின் உண்மையான பலம் துணைக் கதாபாத்திரங்கள்தான். ரோஷன் ஷானவாஸ், ஷ்யாம் மோகன் உள்ளிட்டவர்கள் வரும் காட்சிகளில் சின்னச் சின்ன அசைவுகள்கூட சிரிப்பு வெடிகளாகின்றன. குடித்துவிட்டு உளறுவது, குறும்படம் எடுக்கும் களேபரம், சமையல் தொழிலின் சிக்கல்கள், இளைஞர்களின் ஈகோ மோதல்கள் என வாழ்க்கையின் சாதாரண தருணங்களையே நகைச்சுவைக்கான மூலப்பொருளாக மாற்றியிருக்கிறார் இயக்குநர்.
அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு கேரளத்தின் அழகை வெறுமனே பின்னணியாக வைத்திருக்காமல், கதையின் ஒரு பகுதியாகவே உணரச் செய்கிறது. விஷ்ணு விஜய்யின் இசையும் படத்தின் இலகுவான மனநிலைக்குப் பக்கபலமாகிறது.
குடிக்கும் காட்சிகள் சற்றே அதிகம் என்பது மட்டும் உறுத்தல். அதைத் தாண்டிப் பார்த்தால், படம் தரும் குதூகலம் அந்தக் குறையை மறக்கடித்துவிடுகிறது.
‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ – காதல் கதையைச் சொல்லி, வாழ்க்கையின் சின்னச் சின்ன அபத்தங்களைக் காட்டி, நம்மையும் கொஞ்சம் லேசாக்கி அனுப்பும் கலகலப்பான குடும்ப யூனிட்!

