‘ஜெயிலர் 2’ விமர்சனம்!

முதல் பாகத்தில் ரசித்த பல அம்சங்கள் இதிலும் இருக்கின்றன. கண்ணாடி, காலணிக் கயிறு, வீடியோ கால், டிஷ்யூ பாக்ஸ், ஸ்னைப்பர்கள், கௌரவத் தோற்றங்கள் என ரசிகர்களுக்குப் பரிச்சயமான விஷயங்கள் மீண்டும் வருகின்றன. ஆனாலும், வெறும் மறுபதிப்பாக இல்லாமல் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருப்பதில் நெல்சன் ஓரளவு வெற்றி பெறுகிறார்.
முதல் பாதியில் நெல்சனுக்கே உரித்தான பிளாக் காமெடி களைகட்டுகிறது. நமோ நாராயணாவின் மூர்த்தி கதாபாத்திரம், வாயால் வடை சுட்டாலும் செயல்பாட்டில் தடுமாறும் உள்ளூர் பிரபலமாக வந்து சிரிக்க வைக்கிறது. தனக்குள் எரிமலையை வைத்துக்கொண்டு வெளியே அப்பாவியாக வலம் வரும் ரஜினியின் பாணி, பழைய ‘பாட்ஷா’ நினைவுகளையும் கிளறுகிறது.
எதிரிகள் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு, சரியான நேரத்தில் தனது ஆட்டத்தைக் காட்டும் ரஜினியின் திரை ஆளுமைதான் இங்கே முக்கியமான பலம். யோகி பாபுவின் வருகையும் அவ்வப்போது சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது. முதல் பாகத்துடனான தொடர்புகளும், முத்துவேல் பாண்டியனின் உண்மையான அடையாளத்தைத் திலீப் கண்டுபிடிக்கப் போகும் விதமும் முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன.
இரண்டாம் பாதியில் படம் சீரியஸ் மோடுக்கு மாறுகிறது. கல்பக் குடும்பத்தினர் புத்திசாலித்தனமும் உடல் வலிமையும் கொண்ட ஆபத்தான எதிரிகளாக அறிமுகமாகிறார்கள். அதேசமயம், தனது மகனைக் கொன்ற உண்மையை முத்துவேல் பாண்டியன் குடும்பத்தினரிடமிருந்து மறைக்கும் பதற்றமும் கதைக்கு உணர்ச்சிகரமான அடித்தளத்தைத் தருகிறது.
ஆனால், இங்கேதான் நெல்சனின் திரைக்கதை தடுமாறுகிறது. வில்லன்கள் பெரிய அச்சுறுத்தலாகத் தெரிந்தாலும், அவர்களைச் சமாளிப்பது ஜெயிலருக்கு அத்தனை பெரிய சவாலாக இல்லை. வழக்கமான மாஸ் காட்சிகள் அணிவகுக்க, மோதலின் தீவிரம் குறைகிறது. முக்கியமான உண்மை வெளிப்படும் தருணம்கூட, அடுத்தடுத்த காட்சிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குடும்ப உறவுகள், பழிவாங்கும் உணர்வு, குற்ற உலகின் ஆபத்து என அனைத்தையும் இணைத்து உணர்ச்சிகரமான அதிரடிப் படமாக மாறியிருக்க வேண்டியது, சில இடங்களில் சண்டையும் துப்பாக்கிச் சத்தமும் நிறைந்த சாதாரண மாஸ் படமாகச் சுருங்கிவிடுகிறது. முதல் பாதியில் இருந்த நக்கலும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லாதது குறை.
இரண்டாம் பாதி முழுமையாகக் கைகொடுக்காவிட்டாலும், படத்தை ரசிக்க வைக்கும் முக்கியமான காரணம் ரஜினிகாந்த். தனது வயதுக்கும் தற்போதைய திரைப்பயணத்துக்கும் ஏற்ற வகையில் சூப்பர் ஸ்டாரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நெல்சன் புரிந்துகொண்டிருக்கிறார்.
நீண்ட சண்டைக் காட்சிகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பார்வை, ஒரு சின்ன சைகை, ஒரு ஸ்டைலான நடை… போதும்! அடுத்த நிமிடமே களத்தில் இறங்கிவிடுகிறார்கள் அவரது நண்பர்கள். இந்தத் தொடரின் தனிச்சிறப்பான கௌரவத் தோற்றங்கள் ரஜினியின் திரை ஆளுமையை மேலும் உயர்த்துகின்றன. மூன்றாம் பாகத்துக்கான முன்னறிவிப்பும் ரசிகர்களுக்கு விருந்து.
50 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தில் ரஜினி உருவாக்கிய பிரம்மாண்டமான பிம்பத்தை, சண்டைகளைக் காட்டிலும் அவரது இருப்பின் மூலமாகவே நெல்சன் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம். அதற்குத் தனது பின்னணி இசையால் அனிருத்தும் தீனி போடுகிறார். ரஜினி திரையில் தோன்றும் தருணங்களை இசை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றுகிறது.
முதல் பாதியில் நெல்சனின் நக்கல், ரஜினியின் ஸ்டைல், கதாபாத்திரங்களின் குறும்பு என வேட்டை உற்சாகமாகத் தொடங்குகிறது. இரண்டாம் பாதியில் ஆக்ஷன் அதிகரித்தாலும், உணர்ச்சியும் எதிர்பார்ப்பும் அதே அளவுக்கு உயரவில்லை. இருந்தாலும், ரஜினியின் திரை ஆளுமையும் அனிருத்தின் அதிரடி இசையும் படத்தைக் காப்பாற்றுகின்றன.
ரஜினியின் திரை ஆளுமை, நெல்சனின் குறும்பு, அனிருத்தின் அதிரடி இசை… மூன்றும் கைகோத்தாலும், இரண்டாம் பாதியில் வேட்டை கொஞ்சம் தடுமாறுகிறது!

