திரை விமர்சனம்

“ஆட்டம் புதுசு… முடிவு பழசு!” : ‘ஐம் கேம்’ விமர்சனம்!

சூதாட்டம், கடன், கிரிக்கெட் பந்தயம், கோமா, கண்விழித்ததும் எதிர்கொள்ளும் விநோத அனுபவம்… இத்தனை சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு கதைக்குள் வைத்துவிட்டு, அதை மூன்று மணி நேரத்துக்கு நெருக்கமாக இழுத்துச் சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் துல்கர் சல்மான் நடிப்பில், ‘RDX’ புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கியிருக்கும் ‘ஐம் கேம்’.

டான் ஜானுக்கு (துல்கர் சல்மான்)  பணம் என்றால் பாசம், சூதாட்டம் என்றால் உயிர். சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து கடனாளியாகும் டான், விடுவதாக இல்லை. கடைசியாக கிரிக்கெட் பந்தயத்தில் கைவைக்கிறார். அங்கேயும் அதிர்ஷ்டம் காலை வார, விரக்தியில் அவர் எடுக்கும் ஒரு முடிவு வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது.

கோமாவிலிருந்து கண்விழிக்கும் டானைப் பார்த்து ‘எல்லாம் சரியாகிவிட்டது’ என்று சுற்றியிருப்பவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், டானுக்குத் தெரியும்… தான் முன்பு இருந்த டான் இல்லை என்று! என்ன நடந்தது? ஏன் நடந்தது? அதன்பிறகு டான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கதைக்கரு… கவர்கிறது!

துல்கர் சல்மான் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் வித்தியாசமானவர். வழக்கமான ஹீரோ கதைகளைத் தாண்டி, தனக்குள் நடிப்பதற்கான இடம் இருக்கும் கதாபாத்திரங்களைத் தேடிப்பிடிப்பார். அந்த வரிசையில் ‘ஐம் கேம்’ ஆரம்பத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக முதல் பாதி. கதையை மெதுவாகக் கட்டமைத்து, சரியான இடத்தில் ஒரு திருப்பத்தைக் கொடுத்து, ‘அடுத்து என்ன?’ என்று நம்மை நாற்காலியில் உட்கார வைக்கிறார்கள். அந்த இடம் வரை இயக்குநரின் ஆட்டம் நன்றாகவே இருக்கிறது.

துல்கரும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை. டானின் பதற்றம், குழப்பம், கோபம், வலி என கதாபாத்திரத்தின் பல முகங்களையும் இயல்பாகக் கடத்துகிறார். குறிப்பாக இடைவேளைக் காட்சியில் அவரது உழைப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.

காயடு லோஹர் அழகாக இருக்கிறார். துல்கருடன் வரும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. மிஷ்கின் வில்லனாகத் தோன்றினாலும், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் ‘வில்லத்தனம்’ கொடுத்திருக்கலாம். சம்யுக்தா விஸ்வநாத் சிறிய இடத்திலும் கவனம் ஈர்க்கிறார். இரண்டாம் பாதியில் வரும் ஆண்டனி வர்கீஸ், உணர்வுபூர்வமான நடிப்பால் படத்துக்கு ஒரு புதிய வேகத்தைத் தருகிறார்.

ஆனால்… இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தடுமாறுகிறது!

முதல் பாதியில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாம் பாதி முழுமையாகக் காப்பாற்றவில்லை. புதுமையான கதைக்கரு இருந்தாலும், அதைச் சொல்லும் விதத்தில் புதுமை குறைகிறது. சில காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

அதிலும் ஆக்ஷன் காட்சிகள். ஆரம்பத்தில் பரபரப்பாகத் தெரிந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடிந்துவிடுவதால் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைகிறது.

கிரிக்கெட் பந்தயம் தொடர்பான பகுதிகளிலும் புதிதாகச் சொல்ல அதிகம் இல்லை. இதுபோன்ற கதைக்களத்தை நாம் ஏற்கெனவே பல படங்களில் பார்த்துவிட்டதால், ‘ஐம் கேம்’ அந்த இடத்தில் தனித்துவமாகத் தெரியவில்லை.

முக்கியமாக, நீளம்!

இந்தக் கதைக்கு இவ்வளவு நீளமான பயணம் தேவையா என்ற கேள்வி படம் முடிந்ததும் நிச்சயம் எழுகிறது. ஒரு இருபது, முப்பது நிமிடங்களைத் தாராளமாகக் கத்தரித்திருந்தால், படத்தின் வேகம் கணிசமாக அதிகரித்திருக்கும்.

மிஷ்கினின் வில்லன் கதாபாத்திரத்துக்கும் இன்னும் கொஞ்சம் மிரட்டல் தேவை. ஹீரோவுக்கு இணையான வலிமையான எதிரி இருந்திருந்தால், இருவருக்குமான மோதல் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

டெக்னிக்கல் டீம்… தூள்!

படத்தின் உண்மையான பலம் தொழில்நுட்பக் குழு. ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பிரம்மாண்டத்தைக் கொடுக்கிறது. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் காதுக்குள் எனர்ஜி பானத்தை ஊற்றுகிறது.

சமன் சாக்கோவின் எடிட்டிங் சண்டைக் காட்சிகளில் கச்சிதமாக இருந்தாலும், மெதுவான பகுதிகளில் கத்தரி இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம்.

நஹாஸ் ஹிதாயத் ஒரு சுவாரஸ்யமான கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் அந்தக் கதையை கடைசி வரை ஒரே வேகத்தில் கொண்டு செல்ல முடியாமல் போனதுதான் பிரச்னை.

மொத்தத்தில்…

‘ஐம் கேம்’ என்ற பெயருக்கு ஏற்றபடி படம் ஒரு வித்தியாசமான ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. ஆனால், பாதி ஆட்டத்துக்குப் பிறகு அதே வேகத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறது.

துல்கரின் நடிப்பு, ஆக்ஷன், ஒளிப்பதிவு, பின்னணி இசை என பல பிளஸ் பாயின்ட்கள் இருந்தாலும், நீளமான இரண்டாம் பாதியும், ஊகிக்க முடிகிற திருப்பங்களும் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன.

புதுமையான கதைக்கருவுக்காக ஒருமுறை ஆடிப் பார்க்கலாம்… ஆனால் ‘வின்னிங் ஷாட்’ அடிக்கும் அளவுக்கு இந்த ‘கேம்’ இல்லை!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE