திரை விமர்சனம்

‘டோரதி’ பேசும் விஷயங்கள் முக்கியமானவை. ஆனால்.. ‘டோரதி’ திரை விமர்சனம்!

1990-களில் மதுரையில் ஒரு கிராமம். சாதி, வர்க்கம், ஆணாதிக்கம், வன்முறை என எல்லாமே அங்கே இயல்பான வாழ்க்கையின் ஓர் அங்கம். ‘வலிமையானவன் மட்டுமே வாழ முடியும்’ என்ற எழுதப்படாத சட்டத்துக்குள் வளரும் இரு நண்பர்கள் – கார்த்தி (ரிஷிகாந்த்), சுப்பு (சனந்த்).

மது, சண்டை, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, வயதுக்கேற்ற குறும்புகள்… இவர்களின் உலகம் அவ்வளவுதான். ஆனால், சுப்புவின் வீட்டுக்கு மலையாளப் பெண்ணான டோரதி (கீர்த்தி சுரேஷ்) அண்ணியாக வந்ததும், அந்த உலகம் மெல்லக் கலைகிறது.

ஒரு பெண்ணின் வருகை இரண்டு நண்பர்களுக்குள் விரிசலை ஏற்படுத்துகிறது. அதைவிட முக்கியமாக, அவர்கள் இதுவரை ஆண்மை என்று நம்பிக்கொண்டிருந்த பல விஷயங்களையே கேள்விக்குள்ளாக்குகிறது.

கார்த்திக் சுப்புராஜின் படங்களில் எப்போதும் ஒரு வித்தியாசமான உலகம் இருக்கும். ஆனால், ‘டோரதி’ அந்த உலகத்தை அலங்கரிக்காமல் அப்படியே நம் முன்னால் நிறுத்துகிறது.

மண், மனிதர்கள், மொழி, உடைகள், வீடுகள், வன்முறை… எல்லாமே செயற்கைத்தனம் இல்லாமல் இருக்கின்றன. சமீபத்திய தமிழ் சினிமாவில் இவ்வளவு ‘ரஸ்டிக்’ ஆன உணர்வைக் கொடுக்கும் படங்கள் குறைவு.

படத்தில் இருக்கும் ஒரே ‘சினிமாத்தனம்’ இசைதான். ஆனால், அது கூட படத்தின் இயல்பை உடைக்கவில்லை. மாறாக, இளையராஜாவின் இசை அந்தக் கிராமத்தின் காற்றுக்குள் கலந்துவிடுகிறது.

‘ஆண்மை என்றால் என்ன?’ என்பதுதான் படத்தின் அடிப்படைக் கேள்விகளில் ஒன்று.

சிறுவயதில் கார்த்திக்கு ஆண்மையின் இலக்கணத்தை கற்றுக் கொடுப்பவன் சுப்பு. ஆனால், காலம் செல்லச் செல்ல, அதே சுப்பு அவனுக்கு பெண்மை, உணர்வு, அன்பு ஆகியவற்றின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறான்.

இதுதான் படத்தின் அழகான முரண்.

ஆனால், படம் பேச விரும்பும் கருத்துக்கும் அதைச் சொல்லும் விதத்துக்கும் இடையே சில இடங்களில் பெரிய இடைவெளி தெரிகிறது.

சாதி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, LGBTQIA+ சமூகத்தின் மீதான பார்வை, வன்முறையின் அரசியல் என பல விஷயங்களைப் படம் கேள்வி கேட்கிறது. ஆனால், சில காட்சிகளில் படம் எதிர்க்க நினைக்கும் விஷயங்களையே நீண்ட நேரம் அப்பட்டமாகக் காட்டுகிறது.

‘இதை விமர்சிக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே, அதையே பார்வையாளரின் கண்முன் ரசிக்கத்தக்க காட்சியாக மாற்றிவிடும் ஆபத்து இங்கே இருக்கிறது.

குறிப்பாக திருநங்கை கதாபாத்திரத்தின் சித்தரிப்பு, அதன் நோக்கம் எவ்வளவு முற்போக்கானதாக இருந்தாலும், சில இடங்களில் அதே சமூகத்தைப் பற்றிய பழைய சினிமா பிம்பங்களுக்குள் சிக்கிக்கொள்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் தனது படங்களில் சமூகப் பிரச்னைகளைத் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். ஆனால், ‘டோரதி’யில் அந்த அரசியல் இன்னும் நேரடியாகத் தெரிகிறது.

சாதி, ஆணாதிக்கம், பாலின அரசியல், வன்முறை என பல அடுக்குகளை ஒரே கதைக்குள் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்.

 

அதனால்தான் இது அவருடைய தனிப்பட்ட படமாகவும் தோன்றுகிறது.

அதிலும் கார்த்தி, சுப்பு என்ற கதாபாத்திரப் பெயர்களே ‘கார்த்திக் சுப்புராஜ்’ என்ற பெயருக்குள் இருப்பது போன்ற சிறு விளையாட்டுகள் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் தொழில்நுட்பம் அதன் மிகப்பெரிய பலம்.

எஸ். திருநாவுக்கரசுவின் கேமரா கிராமத்தை வெறும் பின்னணியாகப் பார்க்கவில்லை. அந்தக் கிராமமே ஒரு கதாபாத்திரமாக மாறுகிறது.

குறிப்பாக சுப்புவின் வீட்டில் ஒரு உடல் தூக்கில் தொங்குவதைக் கண்டுபிடிக்கும் காட்சியில், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகத்திலும் பதியும் அதிர்ச்சியை கேமரா தனித்தனியாகப் பதிவு செய்யும் விதம் அபாரம்.

அதேபோல திறந்தவெளியில் நடக்கும் சண்டைக் காட்சி – சினிமா சண்டை போல இல்லாமல், உண்மையில் இரண்டு மனிதர்கள் மோதிக்கொள்வதைப் பார்ப்பது போல இருக்கிறது.

இளையராஜாவின் பின்னணி இசை அந்தக் காட்சிக்கு இன்னொரு அடுக்கைச் சேர்க்கிறது.

படத்தின் காட்சியமைப்பில் இன்னொரு சுவாரஸ்யமான முயற்சி – ஃப்ளாஷ்பேக் வண்ணத்தில். நிகழ்காலம் நிறமற்றது.

ஆரம்பத்தில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவத்துக்குப் பிறகு, அந்த உலகத்திலிருந்து நிறமே வெளியேறிவிட்டது போல உணர வைக்கிறது இந்த உத்தி.

இயக்குநர், ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, எடிட்டர் கணேஷ் சிவா ஆகியோரின் கூட்டணி படத்துக்கு ஒரு தனித்துவமான காட்சி மொழியைக் கொடுத்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷுக்கு அதிகமான திரை நேரம் இல்லை. ஆனால், அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அந்த நிறமற்ற உலகத்துக்குள் கொஞ்சம் உயிர் வந்துவிடுகிறது.

வெள்ளை கேரளப் புடவை, தலையில் மல்லிகைப்பூ என அவரது அறிமுகம், வழக்கமான ‘மலையாளி பெண்’ சினிமா பிம்பத்தை நினைவுபடுத்தினாலும், அவரது கதாபாத்திரத்தின் இருப்பு கதைக்கு முக்கியமான திருப்பத்தைத் தருகிறது.

‘டோரதி’ பேசும் விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், அவற்றைச் சொல்லும் விதம் சில இடங்களில் படத்தின் மீதே பாரத்தை ஏற்றுகிறது.

ஒருபக்கம் சாதியையும் ஆணாதிக்கத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இன்னொரு பக்கம், அவற்றைச் சித்தரிக்கும் காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்கின்றன.

அதனால் படம் எதிர்க்கும் விஷயங்களே சில சமயம் படத்தின் அழகியல் பகுதியாக மாறிவிடுகின்றன.

இதுதான் ‘டோரதி’யின் மிகப்பெரிய முரண்.

மொத்தத்தில், மண் வாசனையும் மனிதர்களின் கசப்பான உண்மைகளும் கலந்த ஒரு துணிச்சலான முயற்சி ‘டோரதி’. காட்சிகளில் கார்த்திக் சுப்புராஜின் கைரேகை அழுத்தமாகத் தெரிகிறது. ஆனால், கருத்துகளைச் சொல்லும் ஆர்வத்தில் சில இடங்களில் படம் பார்வையாளரின் மீது அதிகமாகப் பேசுகிறது.

ரா… ரஸ்டிக்… அரசியல்… என பல அடுக்குகளைக் கொண்ட ‘டோரதி’,  விவாதிக்க வைக்கும் படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE