திரை விமர்சனம்

 ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரை விமர்சனம்! 

திருமணத்தை வெறுக்கும் ஹீரோ… அவரை காதலிக்கும் வாடகைத்தாய்… இருவருக்கும் நடுவில் ஒரு குழந்தை! இந்த முக்கோணத்தை வைத்து குடும்பம், காதல், பாசம், பணம் எனப் பல விஷயங்களை கலந்து கொடுத்திருக்கிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர். கோடிகளை புரட்டும் தொழிலதிபர். அம்மாவின் செல்ல மகன். ஆனால் திருமணம் என்ற வார்த்தை மட்டும் அலர்ஜி! அம்மா ராதிகாவோ, “மகனுக்கு ஒரு கல்யாணம்… குடும்பத்துக்கு ஒரு வாரிசு” என விடாப்பிடியாக நிற்கிறார். மகனோ திருமணத்தைத் தவிர எல்லாவற்றையும் ஓகே சொல்கிறார். அம்மாவின் கவலையைப் போக்க சூர்யா எடுக்கும் வித்தியாசமான முடிவு – வாடகைத்தாய் மூலம் குழந்தை!

குழந்தை வந்ததும் அம்மாவுக்கு சந்தோஷம். ஆனால் அடுத்த சில நாட்களில் குழந்தைக்கு ஆபத்து. குழந்தையை காப்பாற்ற வாடகைத்தாயைத் தேடிப் போகிறார் சூர்யா. அங்கே அழகான இளமையான மமிதா பைஜு.

“இந்த சின்ன பொண்ணா குழந்தையின் அம்மா?” என அதிர்ச்சியாகிறார் சூர்யா. குழந்தையை காப்பாற்ற இருவரும் சேர்ந்து பயணிக்கிறார்கள். பயணத்தின் போக்கில் மமிதாவின் மனதில் காதல் முளைக்கிறது. ஆனால் சூர்யாவோ, “உனக்கு 20 எனக்கு 40” என காதலுக்கு கதவைச் சாத்துகிறார். அந்தக் கதவு திறக்கிறதா? சூர்யா ஏன் திருமணத்தையே வெறுக்கிறார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

 ஸ்டைல் – சென்டிமென்ட் சூர்யா!

பணக்கார தொழிலதிபராக சூர்யா கச்சிதம். ஸ்டைலாக வலம் வந்தாலும், கதாபாத்திரத்தை ஓவராக தூக்கிப் பிடிக்காமல் இயல்பாக நடித்திருக்கிறார்.அம்மாவின் மீது இருக்கும் பாசத்தை வெளியில் காட்டாமல் உள்ளுக்குள் வைத்திருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அம்மாவை நினைத்து சூர்யா உடைந்து போகும் காட்சி – சென்டிமென்ட் மீட்டர் எகிறும் இடம்! அந்த ஒரு காட்சிக்காகவே சூர்யாவுக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

அழகும் நடிப்பும் ஆஹா… மமிதா பைஜு !

கதையை கலகலப்பான காக்டெயிலாக மாற்றுவது  மமிதாதான். குறும்பு, காதல், வெட்கம், சோகம் என உணர்ச்சிகளை சரியான அளவில் வெளிப்படுத்துகிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டையும் சரளமாகப் பேசி கதாபாத்திரத்தை இயல்பாக்குகிறார். சூர்யாவை காதலிக்க ஆரம்பித்த பிறகு வரும் காட்சிகளில் மமிதாவின் எனர்ஜி படத்துக்கே வேகம் கொடுக்கிறது.

இது வேறு மாதிரி ராதிகா!

மகனுக்கு திருமணம் செய்து வைக்கத் துடிக்கும் அம்மாவாக ராதிகா இயல்பாகப் பொருந்துகிறார்.

மகனின் வாழ்க்கை குறித்த கவலையும், குழந்தை வந்ததும் ஏற்படும் சந்தோஷமும், பின்னர் வரும் அதிர்ச்சியும் அவரது நடிப்பில் நன்றாகவே பதிவாகின்றன.

டெக்னிக்கல் டீம் – பிரமாண்டம் ஓகே!

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் பணக்கார தோற்றத்துக்கு பக்கபலமாக இருக்கிறது.

“இது சாதாரண குடும்பம் இல்லை!” என்பதை வீடு, லொகேஷன், வாழ்க்கை முறை என ஒவ்வொரு ஃபிரேமும் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் காதுக்கு இதம். பின்னணி இசையும் மெலோடி பக்கம் சென்று காட்சிகளின் உணர்வைத் தூக்குகிறது.

நவீன் நூலியின் எடிட்டிங் மெதுவான திரைக்கதையை சலிப்பில்லாமல் நகர்த்துகிறது.

யோசிக்கவைக்கும்  வெங்கி அட்லூரி !

திருமணத்தை வெறுக்கும் ஒரு ஆணின் மனநிலையை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் வெங்கி அட்லூரி.

திருமணம் வேண்டாம்… ஆனால் குழந்தை வேண்டும். உறவு வேண்டாம்… ஆனால் பாசம் வேண்டும்.
சுதந்திரம் வேண்டும்… ஆனால் தனிமை வேண்டாம். இந்த முரண்பாடுகள்தான் சஞ்சய் கதாபாத்திரத்தின் அடிப்படை.

அதே நேரத்தில், சில இடங்களில் இயக்குநர் சர்ச்சைக்குரிய விஷயங்களை நகைச்சுவையாகக் கடந்து செல்கிறார். குறிப்பாக நாயகனின் உறவுகள் குறித்த அணுகுமுறை சில இடங்களில் நெருடுகிறது.

ஆனால் உறவுகள் பற்றிய சில வசனங்கள் மட்டும் நறுக்! “சண்டையால உறவுகள் பிரியறதில்ல… சண்டைக்குப் பிறகு எப்படி பேசுறதுன்னு தெரியாததாலதான் பிரியுது.” போன்ற வசனங்கள் படத்தை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், கொஞ்சம் யோசிக்கவும் வைக்கின்றன. பெரிய பணக்காரர்களின் உலகத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றாலும், கடைசியில் படம் பேசுவது பணம் பற்றியல்ல… உறவுகள் பற்றித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE