திரை விமர்சனம்

‘பத்தா’ திரை விமர்சனம்!

சாராய வியாபாரம், அடிதடி, தாதாயிசம் என காலாடிபேட்டை ஏரியாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘பத்தா’ விஜய் சேதுபதி. அவரைப் பார்த்தாலே பயந்து ஒதுங்கும் ஒரு சிறுவன். ஆனால், காலம் ஒரு விசித்திரமான விளையாட்டை விளையாடுகிறது. அதே சிறுவனே ஒரு பள்ளி பாத்ரூமுக்குள் பத்தாவை எட்டு நாட்கள் அடைத்து வைக்கும் சூழ்நிலை!

பாத்ரூமுக்குள் சிக்கிக்கொண்ட பத்தாவுக்கு ஒரே கோபம் — “என்னை இங்கே அடைத்து வைத்தது யார்?” வெளியே வந்ததும் அந்த அடையாளம் தெரியாத நபரை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என துடிக்கிறார். ஆனால், அவரை பாத்ரூமிலிருந்து காப்பாற்றியவனே தன்னை அடைத்து வைத்த சிறுவன் என்பதுதான் கதையின் சுவாரஸ்யமான திருப்பம்.

அந்தச் சிறுவன் ஏன் இப்படிச் செய்தான்? பத்தாவை பார்த்து நடுங்கிய அவனுக்கு, அவரையே எட்டு நாட்கள் அடைத்து வைக்கும் அளவுக்கு தைரியம் எப்படி வந்தது? எல்லாவற்றுக்கும் மேலாக, உண்மை தெரிந்தால் பத்தா என்ன செய்வார்?

1986-ல் நடக்கும் கதை. காலாட்பேட்டை பகுதியின் அன்றைய சூழலையும், அங்கிருந்த மனிதர்களின் பயத்தையும் எளிமையாகக் காட்சிப்படுத்துகிறது படம். பெரிய திருப்பங்களோ, சிக்கலான திரைக்கதையோ இல்லாமல், ஒரு சின்ன சம்பவத்தைச் சுற்றியே கதை நகர்கிறது.

பாத்ரூமுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பத்தாவுக்கு தினமும் காலையில் உணவு கிடைக்கிறது. அதை கொண்டு வந்து வைப்பது யார் என்று தெரியாது. உணவை கொடுக்கும் கையும், அவரை அடைத்து வைத்திருக்கும் கையும் ஒன்றுதான் என்பது பார்வையாளர்களுக்குத் தெரிந்திருந்தாலும், பத்தாவுக்குத் தெரியாது. இந்த ‘தெரியும்… தெரியாது’ விளையாட்டுதான் படத்தின் முக்கிய சுவாரஸ்யம்.

பாலாஜி தரணிதரன், இந்த சிம்பிளான கருவை பரபரப்பான ஆக்‌ஷன் கதையாக மாற்றாமல், மனிதர்களின் உணர்வுகளுக்குள் பயணிக்க வைக்கிறார். குறிப்பாக, பத்தாவைப் பார்த்து பயப்படும் சிறுவனின் மனநிலையும், வெளியே வந்த பிறகு பத்தாவிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற அவனது பதற்றமும் கதைக்கு உயிர் கொடுக்கிறது.

ரவுடி என்றாலே பத்து பேரை அடிப்பார்… நாலு பேரை மிரட்டுவார்… ஒரு ஊரையே நடுங்க வைப்பார். ஆனால், இந்தப் ‘பத்தா’வோ ஒரு பள்ளி பாத்ரூமுக்குள் சிக்கிக்கொண்டு, தண்ணீர், வாளி, பாம்பு என்று படாதபாடு படுகிறார்!

விஜய் சேதுபதிக்கு இந்த மாதிரி அலப்பறை கதாபாத்திரங்கள் சொல்லியா தர வேண்டும்? சேட்டையான உடல்மொழி, படபட வசனம், சீரியஸ் நேரத்திலும் காமெடி என ‘பத்தா’வாகப் புகுந்து விளையாடுகிறார். இடையில் எமோஷனும் ஆக்ஷனும் சேர்ந்து அவருக்கு இன்னொரு முகத்தையும் காட்டுகின்றன.

பத்தாவை எதிர்கொள்ளும் சிறுவன் சபரியாக வரும் சாய் ப்ரித்வி ராஜ், படத்தின் சர்ப்ரைஸ். பயத்தையும் நடுக்கத்தையும் அப்பாவித்தனத்தையும் அப்படியே முகத்தில் காட்டி, சில இடங்களில் நம்மையும் நெகிழ வைக்கிறார். குறிப்பாக, விசும்பியபடி தனது பயத்தை பத்தாவிடம் சொல்லும் காட்சி… ‘சூப்பர் சாய்!’ என்று சொல்ல வைக்கிறது. லிஜோமோல் ஜோஸும் கோபம், அக்கறை, காதல் என கதைக்கு உணர்வைக் கூட்டுகிறார்.

பள்ளி பாத்ரூம் கதையாக ஆரம்பித்தாலும், திரைக்கதை அங்கேயே நின்றுவிடவில்லை. பத்தா ஏன் அந்த மூடிய பள்ளிக்குச் சென்றார்? அவரை யார் அடைத்தது? சிறுவனுக்கும் பத்தாவுக்கும் என்ன தொடர்பு? என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறது படம். தண்ணீர் தொட்டி, பாம்பு, கிழிந்த நோட்டுப் பக்கம் என்று சாதாரண பொருட்களைக்கூட காமெடிக்கும், பதற்றத்துக்கும், ட்விஸ்ட்டுக்கும் பயன்படுத்தியிருப்பது இயக்குநர் பாலாஜி தரணிதரனின் சாமர்த்தியம்.

80-களின் சினிமா வாசனையை ஃப்ரேமிலும் லைட்டிங்கிலும் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே. சாய் அபயங்கரின் இசை எமோஷன் காட்சிகளுக்கு துணை நிற்கிறது. கலை இயக்கமும் காலகட்டத்தை மீட்டெடுக்க முயன்றிருக்கிறது. சில இடங்களில் செயற்கைத்தனம் எட்டிப் பார்த்தாலும், ஒட்டுமொத்தமாக படம் தன் வேலையைச் செய்கிறது.

இடைவேளையில் வரும் அதிர்ச்சி ட்விஸ்ட் இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. சிறுவனின் பயம் ஒரு பக்கம்… அவனைப் பார்த்து பத்தா கொடுக்கும் ரியாக்ஷன்கள் இன்னொரு பக்கம்… படம் முழுக்க சிரிப்பும் பதற்றமும் மாறி மாறி வருகிறது. ஆனால், சிறுவன் தப்பிக்கப் போராடும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் நீளமாகி, நம்மையும் சற்றே மூச்சு வாங்க வைக்கின்றன.

ரவுடி கதையை பாத்ரூமுக்குள் அடைத்து,
காமெடியை திரைக்குள் திறந்து விட்டிருக்கிறார் இயக்குநர்!
பத்தா – சிரிக்க வைக்கும்… பதற வைக்கும்…
சில இடங்களில் நெகிழவும் வைக்கும்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE