‘சட்டமும் நீதியும் 2’ திரை விமர்சனம்!
ஒரு கொலை! நான்கு போலீஸ்காரர்கள்! இரு வழக்கறிஞர்கள்! உண்மை யார் பக்கம்? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மங்களை ஒவ்வொரு எபிசோடாக அவிழ்த்துக் காட்டும் ‘சட்டமும் நீதியும் 2’, நீதிமன்ற டிராமாவை விறுவிறுப்பான கிரைம் திரில்லராக மாற்றியிருக்கிறது.
முதல் சீசனில் தனது வாதத்திறமையால் கவனம் ஈர்த்த வழக்கறிஞர் சரவணன், இந்த சீசனிலும் புதிய வழக்குடன் களம் இறங்குகிறார். மகளுக்கு நீதி கேட்டு நீதிமன்ற வளாகத்திலேயே உயிரை மாய்த்துக்கொண்ட ஏழைத் தந்தைக்காகப் போராடி, வழக்கின் பின்னணியில் புதைந்திருந்த மர்மங்களை வெளிக்கொண்டு வந்த சரவணனின் சட்டப் போராட்டம், இப்போது புதிய களத்தில் தொடர்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொலை வழக்கைப் பதிவு செய்யும் காவல்துறை, நான்கு போலீஸ்காரர்களைக் கைது செய்கிறது. ஆனால், அவர்கள் நிரபராதிகள் என்றும், கொலைக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்களது குடும்பத்தினர் கதறுகிறார்கள். இதற்கிடையே, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மனைவியான வரலட்சுமி சரத்குமார், திறமையான வழக்கறிஞராக எதிர்தரப்பைச் சட்டத்தின் முன் நிறுத்தத் தீவிரம் காட்டுகிறார்.
அவரது செல்வாக்குக்கும் வாதத்திறமைக்கும் பயந்து, கைதான போலீஸ்காரர்களுக்காக வாதாட மற்ற வழக்கறிஞர்கள் தயங்குகிறார்கள். அப்போதுதான், சாதாரண வழக்கறிஞரான சரவணன் துணிச்சலுடன் களமிறங்குகிறார். ஒருபுறம் கணவனை இழந்த ஆத்திரத்தையும் நீதியின் மீதான நம்பிக்கையையும் தன் வாதங்களில் வெளிப்படுத்தும் வரலட்சுமி; மறுபுறம், ஆதாரங்களைத் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தும் சரவணன். இருவருக்கும் இடையிலான இந்தச் சட்ட யுத்தத்தில் வெல்வது யார்? உண்மையான குற்றவாளி யார்? கொலையின் பின்னணியில் மறைந்திருப்பது என்ன? இக்கேள்விகளுக்கான விடைகளைத் திருப்பங்களோடு சொல்கிறது ‘சட்டமும் நீதியும் 2’.
நடிப்பில் சரவணனும் வரலட்சுமியும் ஆட்டம் காட்டுகிறார்கள்!
பெரிய பில்டப்புகளோ, தேவையற்ற அலட்டல்களோ இல்லாமல், அனுபவமும் ஆதாரங்களுமே ஒரு வழக்கறிஞரின் பலம் என்பதைத் தனது நடிப்பின் மூலம் உணர்த்துகிறார் சரவணன். எதிர்தரப்பின் வலுவான வாதங்களை நுணுக்கமான ஆதாரங்களால் தகர்க்கும் காட்சிகளில் இயல்பான நடிப்பு. குறிப்பாக, தான் செய்த தவறை உணர்ந்து வருந்தும் தருணத்தில், ஒரு வழக்கறிஞரின் தொழில்முறை பொறுப்புக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையிலான போராட்டத்தை அழுத்தமாக வெளிப்படுத்துகிறார்.
கணவனை இழந்த துயரமும், கொலையாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற வெறியும் மனதுக்குள் கொந்தளித்தாலும், நீதிமன்றத்தில் கம்பீரமான வழக்கறிஞராக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தனது பாத்திரத்துக்கு வலுவூட்டுகிறார். வாதத்திறமையால் எதிரிகளைத் திணறடிப்பது ஒருபுறம் என்றால், ஆதாரங்களின் முன்னால் தனது நம்பிக்கைகள் தடுமாறும்போது வெளிப்படும் மனப்போராட்டம் மறுபுறம். இரண்டையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்.
வரலட்சுமியின் கணவராக வரும் பிரேம்குமார், சரவணனின் ஜூனியராக நடித்திருக்கும் லாவண்யா, குற்றம்சாட்டப்படும் போலீஸ்காரர்களாக வரும் கவிதா பாரதி, ஆறு பாலா, கல்லூரி வினோத் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பத்தில் திரில்லர் மெருகு!
எஸ். கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, நீதிமன்றக் காட்சிகளுக்குத் தனித்துவமான காட்சி மொழியை வழங்குகிறது. கேமரா கோணங்களும் ஒளி–நிழல் அமைப்புகளும் கதையின் தீவிரத்தையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழுத்தமாகக் கடத்துகின்றன.
விபின் பாஸ்கரின் பின்னணி இசை, நீதிமன்ற வாதங்களின் பரபரப்பையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் மேலும் தீவிரமாக்குகிறது. வசனங்களின் தாக்கத்தைக் குறைக்காமல், காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் இசை பயணித்திருக்கிறது.
ஒரு கொலை; அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதுதான் கதையின் மையம். ஆனால், இந்த எளிய கதையை ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் புதிய கேள்விகளை எழுப்பும் வகையில் தொகுத்திருக்கிறார் ஆதிஸ்வரன்.ஆர். அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவதில் அவரது படத்தொகுப்பு வெற்றி பெறுகிறது.
பாலாஜி செல்வராஜ், பிரதீப் மரியான் ஆகியோரின் திரைக்கதை, கதையைத் தேவையற்ற கிளைகளில் பயணிக்க விடாமல் விறுவிறுப்பாக நகர்த்துகிறது. இயக்குநர் பாலாஜி செல்வராஜ், பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்துக்குள்ளேயே நிகழ்ந்தாலும், காட்சிகளை ஒரே தொனியில் நகர்த்தாமல் திருப்பங்களைச் சரியான இடங்களில் விதைத்திருக்கிறார்.
கொலையாகத்தான் இருக்கும் என்று பார்வையாளர்களை நம்பவைக்கும் திரைக்கதை, அடுத்த கணமே தற்கொலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அந்த முடிவுக்கும் வர முடியாதபடி அடுத்த திருப்பம் வந்து நிற்கிறது. இப்படி உண்மையைத் தேடும் பயணத்தில் பார்வையாளர்களையும் ஒரு விசாரணை அதிகாரியாக மாற்றிவிடுகிறது தொடர்.
முதல் சீசனின் வெற்றிப் பாதையில் பயணித்தாலும், புதிய வழக்கு, புதிய மோதல், வலுவான நடிப்பு, அடுத்தடுத்த திருப்பங்கள் எனத் தனக்கான அடையாளத்தை உருவாக்குகிறது ‘சட்டமும் நீதியும் 2’. நீதிமன்றத்தில் வாதங்கள் மட்டுமல்ல, ஆதாரங்களும் சில நேரங்களில் கதையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் இந்தத் தொடர், கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு நல்ல விருந்து!

