‘வட்டக்கானல்’ திரை விமர்சனம்!
கொடைக்கானல் வட்டக்கானல் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். அப்படியொரு அழகிய சூழலில் மேஜிக் மஷ்ரூம் என்று சொல்லப்படும் போதை காளானை பயிரிட்டு கோடிக்கணக்கில் பண அறுவடை செய்கிறார் ஆர்.கே.சுரேஷ். அதே பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் நாயகி மீனாட்சி கோவிந்தராஜன்.
இவரது நிலத்தின் மீது ஆர்.கே.சுரேஷுக்கு ஒரு கண். இவரது மகன் துருவன் மனோவுக்கோ மீனாட்சி கோவிந்தராஜன் மீது ஒரு கண். ஆனால் மீனாட்சிக்கோ தனக்கு சொந்தமான நிலத்தை தோட்டத்தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கவேண்டுமென்ற பெரிய மனது. இதற்கிடையே துருவன் மீது மீனாட்சியும் காதலாகிறார்.
நாயகன் நாயகி இடையில் பூக்கும் காதல், போதை காளான் பயிரிட நிலத்தை கைப்பற்ற துடிக்கும் வில்லனின் ஆசை, மீனாட்சியின் நல்ல எண்ணம், தனது கணவனைக் கொன்றுவிட்டுச் சொத்தை அபகரித்த ஆர்கே சுரேஷை பழிவாங்க காத்திருக்கும் வித்யா பிரதீப் என நான்கையும் ஒரு கோட்டில் இணைத்த கதையே ‘வட்டக்கானல்’.

இயல்பின் எல்லை தாண்டாத நடிப்பில் நாயகன் துருவன் மனோ. கதை தேர்வில் கவனமும் உடல் வாகில் கச்சிதமும் காட்டினால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.
வசீகர அழகும் நல்ல வாய்ப்பு வந்தால் அடித்து ஆடக்கூடிய நடிப்பும் என மீனாட்சி கோவிந்தராஜன் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். வில்லன் ஏரியாவில் வழக்கம்போல் ஆர்.கே.சுரேஷ் மிரட்டல்.
இவர்கள் தவிர ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வினோதினி, மனோ, ஆர்.கே.வரதராஜ், கபாலி விஷ்வந்த், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், பாத்திமா பாபு, முருகானந்தம் ஆகிய கேரக்டர்களும் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் மாரிஸ் விஜய், ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்தும் இன்னும் கூடுதலாக உழைத்திருந்தால் படத்திற்கு பலமாய் அமைந்திருக்கும். இருந்தாலும் ஏமாற்றவில்லை.
போதைக் காளான் பின்னணியில் காதல் மோதலை கலந்து ‘வட்டக்கானலை’ ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பித்தாக் புகழேந்தி. அது பார்டரில் பாஸாகியிருக்கிறது.

