திரை விமர்சனம்

‘Double Occupancy’ விமர்சனம்!

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் – வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களில் குழந்தை இறந்துபோகவே, மீண்டும் கடவுளிடம் முறையிடுகிறார். அப்போது கடவுள் தோன்றி அருள்தரக் குழந்தை உயிர்பெறுகிறது. ஆனால், பெண் குழந்தையாக உயிர்பெறுகிறது. எனவே காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை ஆணாகவும் வளர்கிறது குழந்தை.

ரஜினி எனப் பெயரிடப்பட்டு, ஓர் இதயம் இரு உயிர்கள் என்பதாகவே வளர்கிறார்கள். வளரும் குழந்தைக்குள் இருக்கும் இருவர், வளர வளர தங்களுக்குள் ஒருவித வெறுப்புடன் இருக்கின்றனர். இளம் வயதான நிலையில் தாய், தந்தை இருவரும் விபத்தில் இறக்கின்றனர். அதன் பிறகு `ரஜினி’ சென்னை கிளம்பி வர, பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் எப்படி வளர்க்கிறார், காதல், தொழில், ஏக்கம் என அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன என்பதே அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கும் ‘டபுள் ஆக்குபன்ஸி’ படத்தின் கதை!

படத்தின் முன்னணி கதாபாத்திரமான ரஜினி பாத்திரத்தில் ஆணாக சந்தோஷும், பெண்ணாக ரேஷ்மா வெங்கடேஷும் நடித்திருக்கின்றனர். அறிவியல்பூர்வமாக இதிலிருந்து எப்படி விடுபடுவது எனத் தான் படித்த ‘ஜெனிடிக்ஸ்’ துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது, காதலனிடம் உண்மையைச் சொல்லமுடியாமல் தவிப்பது, தன் சக உயிரான ஆண் ரஜினிக்காகவும் அக்கறைப்படுவது எனக் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் பெண் ரஜினியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ். சண்டைக் காட்சிகள், காதல் காட்சிகள், தன் சக உயிரைப் புரிந்துகொள்கிற காட்சி எனச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ். ஆண் ரஜினியின் காதலி ப்ரியாவாக நடித்திருக்கும் சம்யுக்தா விஸ்வநாதன், பெண் ரஜினியின் காதலன் கார்த்திக்காக வரும் வினோத் கிஷன் இருவரும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் தவிர விடிவி கணேஷ், பக்ஸ் கொடுத்த கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள்.

கொஞ்சம் சிக்கலான கதையை முடிந்த அளவிற்குச் சுவாரஸ்யமான காட்சிகளைக் கொண்டு அடுக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி. ஜெனடிக்ஸ் சார்ந்து பெண் ரஜினி ஆய்வு செய்வது, இரவு நேர பாரில் வேலை செய்கிற ஆண் ரஜினி எனச் சுவாரஸ்யமான லைனைப் பிடித்து இயக்கியிருக்கிறார்.

ஃபேண்டஸி கதைக்கு ஏற்ற கலர்புல் ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் சாந்தகுமார் சக்கரவர்த்தி. ஆக்ஷன் காட்சிகள், ரஜினி ஆணாகவும், பெண்ணாகவும் மாறுகிற காட்சி என முக்கிய பகுதிகளில் தன் பங்கைத் திறம்படச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி. சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெண், மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை ஆண் என்கிற ஒன்லைனை எடுத்திருக்கும் இயக்குநர், கடவுள் அருள், ஜெனிடிக்ஸ் ஆராய்ச்சி, காலம் மாறி, சூழ்நிலைக்கு ஏற்ப எனப் பல விதங்களில் நிகழும் ஆண்-பெண் மாற்றங்கள்… இப்படி லாஜிக்கை மீறி கூடவிட்டுக் கூடு பாய்கிற திரைக்கதை ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. காதலன் ஒரு சில நாட்களில் இதற்குத் தீர்வாக மருந்தைக் கண்டுபிடிப்பது, இவர்கள் மாறும் உண்மை பல இடங்களில் வெளிப்பட்டும் பலரும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது என லாஜிக்கையும் ஷிஃப்ட் போட்டுத் தேட வேண்டியிருக்கிறது.

நன்றி : விகடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE