’நூறு சாமி’ திரை விமர்சனம்!
கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தையே ஓர் அழகிய திரைப்படமாக மாற்றியுள்ளார் இயக்குநர் சசி. மனித உணர்வுகளின் மகத்துவம் போற்றும் திரைப்படங்களைத் தரும் இயக்குநரான அவர், நூறு சாமி மூலம் மறுமணத்தின் அவசியம் போற்றியுள்ளார்.
கிராமத்தில் எளிய குடும்பம். கணவனை இழந்த ஸ்வாசிகா, இரு மகன்களுடன் வாழ்வில் போராடுகிறார். பார்க்காத வேலையில்லை. படும்பாடுகள் கண்ணீர் வரவழைக்கின்றன.
மறுமணம் பற்றி மூத்த மகன் பேசும்போது கோபமடையும் ஸ்வாசிகா, ஒருகட்டத்தில் ஒப்புக்கொள்கிறார். நாம் நினைத்தாலும் ஊர் நினைக்கவேண்டுமே, பாலாஜி சக்திவேல் தலைமையில் ஊரே கூடி எதிர்க்கிறார்கள். ஸ்வாசிகாவின் மறுமணம் எதிர்ப்புக்கனலை மீறி நிகழ்ந்ததா என்பதே நூறு சாமி படத்தின் உண்மைக் கதையின் சுருக்கம்.

வியர்வை படிந்த முகம், ஆபாசமாகப் பேசும் ஆண்களை எதிர்கொள்ளும் மூர்க்கம், தகிக்கும் தனிமை, தொடரும் வறுமை, புறம் பேசும் மனிதர்கள் என எல்லாவற்றையும் சமாளிக்கும் எளிய பெண்ணாக ஸ்வாசிகா நடிப்பின் பரிமாணங்கள் பலநூறாக வெளிப்படுகிறது.
மகன்களாக வரும் அஜய் திஷான், சக்தி இருவரின் நடிப்பிலும் இயல்பைப் பார்க்கமுடியவில்லை. அவர்கள் சண்டையிடும் காட்சிகள் தேவையா? அது விவாதித்து முடிவெடுக்கும் விஷயம். எல்லா நேரங்களிலும் நிதானமற்று படபடப்பாக இருக்கிறார் ஸ்வாசிகா. சின்னச் சின்ன மகிழ்ச்சிகூட இல்லையா…
மறுமணத்திற்கு எதிர்ப்புகள் எந்த பக்கத்தில் இருந்தும் வரலாம் என்பதுபோல வரும் காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு விதவைக்கு மறுமணம் செய்வது அவ்வளவு கஷ்டமா என்று தோன்றினாலும், காலம் அப்படித்தான் நகர்ந்து வந்திருக்கிறது என்ற உண்மை தெரிகிறது.
கிராமத்து உறவுகளையும் மனிதர்களையும் அவர்களது இயல்புகளையும் அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார் சசி. கரும்பு வெட்டும் தொழிலாளியாக மனைவியை இழந்த மனிதராக விஜய் ஆண்டனி மனம் கவர்கிறார். இதுவரை இப்படியொரு கேரக்டரில் அவரைப் பார்க்கவில்லை.
கள்ளக்குறிச்சி மனிதராக திரையில் தோன்றுகிறார். இப்படி அவர் கேரக்டர்களைத் தேர்வு செய்தால் நடிப்பில் பேசப்படுவார். வசனங்கள் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன. இசையும் பாடல்களும் படத்திற்கு சுவை கூட்டுகின்றன. மாயக்கனவோ… பாடல் மயக்குகிறது.
தாய் மாமன் கருணாஸ், புறம்பேசும் பாலாஜி சக்திவேல், ஜென்சன், சிஸ்டர் லிஜோ மோல், டீச்சர் அருள்தாஸ், யூடியூபர் பக்ஸ், வினோதினி, காவ்யா அனில், பாடினி குமார், பகவதிபெருமாள், மோட்சம் தாமரைச்செல்வி என அனைத்து கேரக்டர்களும் தனித்துவமாக அமைந்துள்ளன.
மறுமணம் பற்றி பேசும் திரைப்படத்தில் யூ டியூப் கன்டன்ட் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்தினாலும், கதையின் தீவிரத்தைக் குறைக்கின்றன. இன்று எளிதாக மாறியுள்ள மறுமணம், இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்துவந்ததா என அதிர்ச்சியூட்டி ‘நூறு சாமி’யின் வழியாக அழகு செய்திருக்கிறார் இயக்குநர் சசி.
நன்றி: OH TAMIL

