உக்ரைன் அழகியுடன் சிவகார்த்திகேயன் காதல் : இது ‘பிரின்ஸ்’ சீக்ரெட்
செம்ம பியூட்டியாக இருக்கும் உக்ரைன் அழகியுடன் ‘பிரின்ஸ்’ படத்தில் சூப்பர் ரொமான்ஸ் பண்ணியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
சென்னையில் நடந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த பியூட்டிய நம்ம கண்ணுக்கும் காட்டி கண் திருஷ்டியிலிருந்து தப்பித்தார் சிவகார்த்திகேயன். சரி மேட்டருக்கு வருவோம். இந்த தீபாவளிக்கு ரெண்டே படங்கள் வருது. அதுல ஒன்னுதான் ‘பிரின்ஸ்’. அனுதீப் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். கதாநாயகியாக் நடிக்கும் உக்ரைன் ஒயின் பெயர் மரியா. படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, சுப்புபஞ்சு,பிரபல யூடியூபரான ப்ராங்ஸ்டர் ராகுல், ஃபைனலி பரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சுப்பு பஞ்சு பேசியதாவது:-
“சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஜாலியாகதான் இருக்கும் ஆனால் ’ப்ரின்ஸ்’ திரைப்படம் நாம் எதிர்பார்க்காத வேறு விதமாக அருமையாக வந்திருக்கிறது சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு காமெடி படம் ட்ரெண்ட் செட்டிங் படமாக இருந்திருக்கிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இந்த வரிசையில் ’ப்ரின்ஸ்’ திரைப்படமும் ட்ரெண்ட் செட்டிங் காமெடி படமாக இருக்கும். சிவகார்த்திகேயன் பிரதர்க்கும் அனுதீப் சாருக்கும் நன்றி. எதிர்பார்க்காத பல இடங்களில் நகைச்சுவையை வேறு விதமாக அனுதீப் வைத்திருந்தார். அதை நாங்கள் அனைவரும் ரசித்தது போல பார்வையாளர்களும் நிச்சயம் படத்தை பார்க்கும் போது ரசிப்பீர்கள்” என்றார்.
‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் பேசியதாவது:-
“’பிரின்ஸ்’ திரைப்படம் ஏறக்குறைய 650 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாக இருக்கிறது. சிவாவின் மற்ற படங்களை போல இந்த படமும் வெற்றி பெற்றுவிடும். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள். மறைந்த எம்ஜிஆர், ரஜினி, விஜய் அந்த வரிசையில் இன்று சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருப்பது மகிழ்ச்சி. இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளி என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ”
படத்தின் கதாநாயகி மரியா பேசியதாவது:-
” இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் அனுதீப் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஸ்பெஷல் தேங்க்ஸ் சிவா சாருக்கு. அவருடன் வேலை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. எல்லாருமே என்னிடம் மிகவும் நன்றாக பழகினார்கள். உங்கள் அன்புக்கு நன்றி. இந்தப் படம் மிகவும் ஜாலியான பார்த்து ரசிக்க கூடிய ஒரு திரைப்படம்” என்றார்.
இயக்குநர் அனுதீப் பேசியதாவது:-
“என்னுடைய முந்தைய படமான ‘ஜதி ரத்னலு’ முடித்துவிட்டு இதன் திரைக்கதை எழுதும்போது சிவா சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சிவா சாருக்கும் என்னுடைய ’ஜதிரத்தினலு’ படம் பார்த்து பிடித்திருந்தது. அவரிடம் பேசும் பொழுது காமெடி மட்டும் இல்லாமல் நல்ல மெசேஜ் இருக்க வேண்டிய கதையாக வேண்டும் என்றார். இந்த படம் ஒரு பண்டிகை மூடில் எல்லோரும் சிரித்து கொண்டாடும் விதமாக வந்துள்ளது. இதற்கு முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் நிறைய தமிழ் படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கும் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த வாய்ப்பை இவ்வளவு சீக்கிரம் கொடுத்த சிவா சாருக்கு நன்றி”
சிவகார்த்திகேயன் பேசியதாவது:-
“ ‘ப்ரின்ஸ்’ படத்தைப் பொருத்தவரை இது ஒரு எளிமையான கதை. இந்திய பையன் ஒருவன் ப்ரிட்டிஷ் பெண்ணை காதலிக்கறான் என்ற ஒரு வரிதான். இதில் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடி விஷயங்கள்தான் இந்தப் படத்தை பொருத்தவரை நாங்கள் புதிய விஷயமாக பார்க்கிறோம். காமெடி கவுண்ட்டர்கள் என்றில்லாமல், நாம் பேசும்போது சம்பந்தமே இல்லாமல் வேறொரு பதில் சொல்வது என கதை நகரும். நாங்கள் இந்தப் படத்தில் காட்டியுள்ள ஊர் தமிழ்நாட்டில் எங்குமே கிடையாது. அனுதீப் உருவாக்கிய ஊர் அது. அந்த மக்கள் அனைவரும் அவர்கள் சிந்திப்பதுதான் சரி என்று யோசிப்பார்கள்.
அப்படியான ஊரில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு வரும் லவ் பிரச்சனைகள் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் இவைதான் படம்.
படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. எல்லாருக்கும் பிடிக்கும்படியான ஜாலியான படம் இது. தீபாவளிக்கு குடும்பங்களாக பார்க்கும்படியான எண்டர்டெயின்மெண்ட்டான படம். இன்னொரு பக்கம் கார்த்தியின் ‘சர்தார்’ படம் வெளியாகிறது. இரண்டு படங்களும் முற்றிலும் வேறான கதைக்களம். இரண்டு படங்களின் வெற்றிக்கும் வாழ்த்துகள். அனுதீப் தெலுங்கில்தான் யோசிப்பார். இதை தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கு ஏற்ற மாதிரி கொண்டு போய் சேர்ப்பதுதான் எங்கள் முன் இருந்த சவால். தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னால் அக்டோபர் 21 அன்று வெளியாகிறது. தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. இதற்கு முன்னால் சின்ன வயதில் இருந்து 20 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகும் அனைத்து ஹீரோக்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்போது என்னுடைய படத்தைப் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி”